அண்மை

அதிகாரிகளுக்கு முதல்வர் அதிரடி உத்தரவு... பெண்கள் பாதுகாப்பில் 'No Compromise !

By Sumalekha
29 Jun 2026, 09:25 PM
சட்டம்-ஒழுங்கில் பாரபட்சமின்றி நடவடிக்கை, பெண்கள் பாதுகாப்பில் சமரசமில்லை, போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு கடும் நடவடிக்கை என மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் உரையாற்றினார். அப்போது, "சட்டத்தின் முன் அனைவரும் சமம். தவறு செய்தவர் யாராக இருந்தாலும், எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் பாரபட்சமின்றி உடனடி சட்ட நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்றுத்தர வேண்டும்" என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், பொதுமக்களின் மனுக்களை மனிதநேயத்துடன் அணுகி, அவர்களின் குறைகளை விரைந்து தீர்க்க வேண்டும் என்றும், சான்றிதழ், பட்டா உள்ளிட்ட அடிப்படை சேவைகள் தாமதமின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மாவட்ட ஆட்சியர்கள் திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் கட்டாயம் கள ஆய்வில் ஈடுபட வேண்டும் என்றும், ஒவ்வொரு மாதமும் சட்டம்-ஒழுங்கு ஆய்வுக் கூட்டம் நடத்தி அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பெண்கள் பாதுகாப்பில் "எந்தவித சமரசமும் இல்லை" என்று திட்டவட்டமாக கூறிய முதலமைச்சர், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றார். பள்ளிகளைச் சுற்றியுள்ள கடைகளை தொடர்ந்து கண்காணித்து, தேவையான நேரங்களில் சோதனை நடத்தவும், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தரவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.