அண்மை

88-வது பிறந்தநாளில் அரசியல் துறவறம்: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு!

By Christon
25 Jul 2026, 01:00 PM
அரசியலில் இருந்து விலகுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தனது 88-வது பிறந்தநாளை முன்னிட்டு அரசியலில் இருந்து முழுமையாக விலகுவதாகவும், இன்று முதல் அரசியல் துறவறம் மேற்கொள்வதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தைலாபுரத்தில் வெளியான அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள தனது தைலாபுரம் தோட்டத்தில் 88-வது பிறந்தநாளைக் கொண்டாடிய ராமதாஸுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் தொண்டர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்நாளில், பாமக தலைவரும் அவரது மகனுமான அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

அதனைத் தொடர்ந்து அன்புமணி ராமதாஸுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

"இனி அன்புமணி பார்த்துக்கொள்வார்"

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராமதாஸ், தனது 88-வது வயதில் அரசியல் துறவறம் மேற்கொள்வதாகத் தெரிவித்தார். இனிமேல் தான் அரசியல் பேசப்போவதில்லை என்றும், கட்சியின் அரசியல் நடவடிக்கைகளில் தலையிடப் போவதில்லை என்றும் கூறினார்.

மேலும், கட்சியின் அரசியல் செயல்பாடுகளையும் இனி அன்புமணி ராமதாஸ் பார்த்துக்கொள்வார் என்று கூறிய அவர், தலைசுற்றல் காரணமாகத் சமீபத்தில் தனியார் மருத்துவமனையில் 20 நாட்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதை நினைவுகூர்ந்தார். இனிமேல் தன்னிடம் வருபவர்களைச் சந்திக்கவும் நலம் விசாரிக்கவும் மட்டுமே செய்வேன் என்றும், அரசியலைப் பற்றிப் பேசித் தன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.