தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்பதற்கு முன்பாக அவர் நடிப்பில் கடைசி திரைப்படமாக உருவாகியுள்ள ஜனநாயகன் பல்வேறு தடைகளை தாண்டி வருகின்ற 23 ம் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் ஜொலிக்க உள்ளது. இதனைத் தொடர்ந்து ஒட்டுமொத்த தமிழகமே திருவிழாக் கோலமாக மாறிய நிலையில் திருப்பூரின் ஜவுளித்துறை புதியவர்த்தக உச்சத்தை தொட்டுள்ளது.
திரைத்துறையிலிருந்து விலகி தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறிய நிலையில் தற்போதைய அதிகாரப்பூர்வ கடைசித் திரைப்படம் என்பதால் ஜனநாயகன் படத்திற்கு ரசிகர்களிடமும் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களிடமும் அதிகளவில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்நிலையில் இத்திரைப்படத்தைக் கொண்டாடும் விதமாக முதல் நாள் முதல் காட்சியைக் காண வரும் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் அணிவதற்காகப் பிரத்யேக டி-ஷர்ட்கள் தயாரிக்கும் பணி திருப்பூரில் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது.
திரைப்படம் வெளியாக இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் மிகக் குறுகிய காலக்கட்டமே இருப்பதால் தமிழகத்தின் முன்னணி ஜவுளி மையமான திருப்பூரில் உள்ள 700க்கும் மேற்பட்ட பின்னல் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் முழு வீச்சில் டி-ஷர்ட் தயாரிப்பில் இறங்கியுள்ளன. முதலமைச்சர் விஜய்யின் கம்பீரமான புகைப்படங்கள் மற்றும் கட்சியின் இலச்சினைகள் தாங்கிய வண்ணமயமான ஆடைகள் இரவும் பகலுமாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த அவசரத் தேவையை எவ்விதத் தொய்வுமின்றி பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக பெரும்பாலான உள்ளூர் உற்பத்தியாளர்கள் கூடுதல் பணியாளர்களை கொண்டு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
மேலும்,தயாரிக்கப்படும் ஆடைகளை உடனடியாகக் கொண்டு சேர்க்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் அதிவேக கூரியர் மற்றும் பார்சல் சேவைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அரசியல் மாற்றத்திற்குப் பிறகு வெள்ளித்திரையில் முதலமைச்சரைக் காணப்போகும் ரசிகர்கள் தங்களின் அன்பை வெளிப்படுத்தும்விதமாக இந்த டி-சர்ட் கலாச்சாரத்தை கையில் எடுத்துள்ளனர். இது ஒட்டுமொத்த ஜவுளி தொழிலுக்கும் மிகப் பெரிய பொருளாதார ஊக்கத்தை தந்துள்ளதாக தொழில்துறையினர் பெருமிதம் கொள்கின்றனர்.