ஸ்மார்ட் சாதனங்களின் உலகில் தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் மெட்டா நிறுவனம், ஏஐ (AI) தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஸ்மார்ட் கண்ணாடி வரிசையை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளாவிய கண் கண்ணாடி உற்பத்தியாளரான எசிலார் லக்ஸோட்டிக்கா (EssilorLuxottica) நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய தயாரிப்புகளை உருவாக்கியுள்ளது.
இந்த கூட்டணியில் தயாரிக்கப்பட்டிருந்தாலும், கண்ணாடிகள் மெட்டா நிறுவனத்தின் சொந்த பிராண்டின் கீழ் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
புதிய மெட்டா ஸ்மார்ட் கண்ணாடியின் ஆரம்ப விலை 299 அமெரிக்க டாலர். இந்திய மதிப்பில் இது சுமார் ₹28,000 ஆகும்.
இந்த ஸ்மார்ட் கண்ணாடியில் திரை (Display) வழங்கப்படவில்லை. ஆனால், அதற்கு பதிலாக பல்வேறு ஸ்மார்ட் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கண்ணாடியில் உள்ள ஸ்பீக்கர் மூலம் செல்போனில் வரும் அழைப்புகளை நேரடியாகப் பேசலாம். அதற்காக ஃப்ரேமில் தனி கட்டுப்பாட்டு பொத்தானும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இசையை கேட்கும் வசதி, உயர்தர மைக்ரோஃபோன், தேவையற்ற இரைச்சலைக் குறைக்கும் தொழில்நுட்பம் (Noise Reduction), புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்யும் கேமிரா உள்ளிட்ட வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், சுமார் 8 மணி நேரம் வரை பயன்படுத்தக்கூடிய பேட்டரி இதில் வழங்கப்பட்டுள்ளதாக மெட்டா தெரிவித்துள்ளது.
சமீபத்தில் ஸ்நேப் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கண்ணாடிகளை அறிமுகப்படுத்திய நிலையில், அதற்கு போட்டியாகவே மெட்டா இந்த தயாரிப்பை களமிறக்கியுள்ளதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர். அதிலும், ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதால், அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்த ஏஐ ஸ்மார்ட் கண்ணாடிகள் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளன. இந்திய சந்தையில் இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை. இருப்பினும், விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு வரலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.