சினிமா

விடாமுயற்சி ரிலீஸ் கொண்டாட்டம்.. அஜித் மற்றும் ரசிகர்கள் மீது புகாரளித்ததால் பரபரப்பு

நடிகர் அஜித், திரையரங்கு உரிமையாளர் மற்றும் ரசிகர் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஆர்டிஐ  செல்வம் புகார் அளித்துள்ளார்.

விடாமுயற்சி ரிலீஸ் கொண்டாட்டம்.. அஜித் மற்றும் ரசிகர்கள் மீது புகாரளித்ததால் பரபரப்பு
அஜித்குமார்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் 'துணிவு’ திரைப்படத்தைத் தொடர்ந்து ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன்,  ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர், ரம்யா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

‘விடாமுயற்சி’ திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு\ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் இன்று (பிப். 5) உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது. தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்ட நிலையில் அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்கின் முன்பு குவிந்தனர்.

திரையரங்குகளின் வாயில்களில் வைக்கப்பட்டிருந்த நடிகர் அஜித்தின் கட்டவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்து பட்டாசு வெடித்து ஆடல், பாடல் உடன் பட வெளியீட்டை கொண்டாடினர். நடிகை திரிஷா, இசையமைப்பாளர் அனிருத், நடிகர் ஆரவ் ஆகியோர் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியை ரசிகர்களுடன் பார்த்தனர்.

மேலும் படிக்க: விடாமுயற்சி ரிலீஸ்.. உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

இந்த நிலையில் சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகார் கொடுத்துள்ளார். அதில், நடிகர் அஜித்தின் திரைப்படத்திற்கு ரசிகர்கள் திரையரங்குகளில்  பேனர் கட்டவுட் வைத்து அதற்கு பாலாபிஷேகம் செய்து வருகிறார்கள். அதேபோல் திரையரங்குகள் முழுவதும் நடிகர் அஜித்தின் ரசிகர்கள் அஜித்தே..! கடவுளே..! என்று கூறி ஒட்டுமொத்த கடவுளையும் இழிவுப்படுத்தி வருகிறார்கள். 

இது மதரீதியாக பலர் மனதில் தவறான எண்ணத்தை தூண்டும் வகையிலும் அதேபோல் கடவுளை இயல்பு செய்யும் வகையிலும் உள்ளது. எனவே இதுபோல் ஈடுபடும் நபர்கள் மீதும் நடிகர் அஜித் ரசிகர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என   சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ. செல்வம் புகாரில் தெரிவித்துள்ளார்.

’துணிவு’ திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ‘விடாமுயற்சி’ திரைப்படம் வெளியாவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.