அரசியல்

தமிழ்.. தமிழ்.. என பேசுகிறார்களே தவிர எதையும் செய்யவில்லை.. ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு

தமிழ்.. தமிழ்.. என்று 60 ஆண்டுகளாக பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர, தமிழுக்கும், தமிழ் இலக்கியங்களுக்கும் எதையும் செய்யவில்லை என்றும் தமிழகத்தில் 20 அரசு பல்கலைக்கழகங்கள் இயங்கி வரும் நிலையில் ஒன்றில் கூட பாரதியார் இருக்கை இல்லை என்றும் ஆளுநர் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்.. தமிழ்.. என பேசுகிறார்களே தவிர எதையும் செய்யவில்லை.. ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு
ஆளுநர் ஆர்.என்.ரவி

பாரதியாரின் படைப்புகளை கால வரிசைப்படுத்தி , இருபத்தி மூன்று தொகுதிகளாக தொகுத்துள்ள சீனி விஸ்வநாதனுக்கு 'பத்மஸ்ரீ விருது' அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவருக்கு சென்னை மயிலாப்பூரில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சீனி விஸ்வநாதனை பாராட்டினார். 

நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது,  பாரதியின் தீவிர பக்தர் சீனி விஸ்வநாதன். பள்ளி படிப்பு முதல் எனக்கு பாரதி பற்றிய தகவல்கள் தெரியும். மூன்றரை ஆண்டுகளுக்கு முன், ஆளுநர் மாளிகைக்கு நான் வந்தபோது பாரதி சிலை இல்லாததை அறிந்தேன். பின்னர் பாரதி சிலையை நிறுவனேன். தர்பார் ஹாலை, பாரதி மண்டபம் என மாற்றினேன். 

பாரதியும் அவரது  படைப்புகளும் இமயமலையைப்போன்று மிகப்பெரியது. தமிழுக்கு மிகப்பெரும் தொண்டு செய்தவர் பெருமைக்குரிய தமிழன் பாரதி. ஆங்கிலம் கோலோச்சிய காலக் கட்டத்தில், ஆங்கிலத்தை விட தமிழ் மொழி மேலானது என்பதை பாரதி உரக்கச் சொன்னார். கலை, இலக்கியம், அறிவியல் அனைத்திலும் தமிழால் உயர்த்தி பிடிக்க முடியும் என்றார்.

தமிழகத்தில் 20 பல்கலைக் கழகங்கள் உள்ளன. பாரதியார் பெயரில் கூட பல்கலைக்கழகம் உள்ளது. ஆனால், அவரைப் பற்றிய இருக்கைகள் ஒரு  பல்கலைக்கழகத்தில் கூட  இல்லை. அவரை பற்றியும், அவரது படைப்புகள் பற்றியும் நுணுக்கமாகவும் விசாலமாகவும்  ஆய்வு செய்யப்பட வேண்டும்.

துணைவேந்தர்கள் மிகப்பெரும் அழுத்தத்தில் உள்ளனர். அவர்கள் செயல்பட தயாராக இருந்தாலும் அவர்களால் முடியவில்லை. இந்த நிலை மாறும்.  தமிழுக்கும், தமிழ் இலக்கியங்களுக்கும் எதையும் செய்யாமல் தமிழ்.. தமிழ்.. என 60 ஆண்டுகளாக பேசுகின்றனர். தனியார் பள்ளிகள், கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகங்களில் பாரதியாரை கொண்டாட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாரதி மன்றங்களை அமைத்து பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.