அரசியல்

கச்சத்தீவு ஒப்பந்தம்:  ஆட்சியில் இருந்த அரசுகள் பாவத்தை இழைத்தன- ஆளுநர் குற்றச்சாட்டு

கச்சத்தீவு சுற்றுவட்டார கடல் பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பறித்ததன் மூலம் மத்தியிலும், தமிழ்நாட்டிலும் அப்போது ஆட்சியில் இருந்த அரசுகள் பெரும் பாவத்தை இழைத்தன என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டினார்.

கச்சத்தீவு ஒப்பந்தம்:  ஆட்சியில் இருந்த அரசுகள் பாவத்தை இழைத்தன- ஆளுநர் குற்றச்சாட்டு
ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்தும் வருகின்றனர். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யக் கோரி மத்திய அரசிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல முறை கடிதம் எழுதியுள்ளார். ஆனால், மீனவர்களை விடுவிப்பதற்கான எந்த முயற்சியையும் மத்திய அரசு எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இலங்கை கடற்படையால் கடந்த வாரம் மட்டும் 42 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து  கடந்த 3 நாட்களாக ராமேஸ்வரம், தங்கச்சி மடத்தில் கொட்டும் மழையிலும் மீனவர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் இலங்கை சிறையில் வாடும் மீனவர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றுள்ளனர்.  இந்த பரபரப்பான சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (மார்ச் 2)  ராமேஸ்வரத்தில் போராடும் மீனவர்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். 

தொடர்ந்து, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், "ராமேஸ்வரத்துக்கு இன்று நான் சென்றிருந்தபோது, துன்பத்தில் உழலும் நமது மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளைச் சந்தித்தேன். அவர்களின் நிலை மீது நான் ஆழ்ந்த இரக்கம் கொள்கிறேன். நமது வறியநிலை மீனவர்களின் வாழ்வாதார கவலைகளுக்கு காரணமான மிகவும் உணர்திறனற்ற  1974 -ஆம் ஆண்டு  அநியாயமான ஒப்பந்தத்தால்  பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள். 

கச்சத்தீவு சுற்றுவட்டார கடல் பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பறித்ததன் மூலம் மத்தியிலும், தமிழ்நாட்டிலும் அப்போது ஆட்சியில் இருந்த அரசுகள் பெரும் பாவத்தை இழைத்தன. அன்றிலிருந்து இன்று வரை நமது மீனவ சமூகம் தொடர்ந்து இன்னல்களை அனுபவித்து வருகிறது. இலங்கை அரசால் அவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் படகுகள்  பறிமுதல் செய்யப்படுகின்றன. 

இந்த நீடித்த பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். இந்தப் பிரச்சினையை அரசியலாக்குவதற்குப் பதிலாகவும், மத்திய அரசைக் குறை கூறுவதற்குப் பதிலாகவும்,  ஆக்கபூர்வமான அணுகுமுறையை மாநில அரசு  மேற்கொண்டால் அது பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு பெரிதும் உதவும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, 1974-இல் நடந்த தவறுக்கு சம பொறுப்பு, அன்றைய மத்திய ஆட்சி கூட்டணியில் இருந்த இன்று மாநிலத்தை ஆளும் கட்சிக்கும் உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.