அரசியல்

விஜய்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு.. கூட்டணியா? தனித்தா?.. என்ன செய்ய போகிறது தவெக?

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 8 முதல் 10 சதவீத வாக்குகள் வரை கிடைக்கக் கூடும் என தேர்தல் வியூக பொறுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு.. கூட்டணியா? தனித்தா?.. என்ன செய்ய போகிறது தவெக?
பிரசாந்த் கிஷோர்-விஜய்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகின்றது. இதன் முக்கிய கட்டமாக தேர்தல் வியூக பொறுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன்  தவெக தலைவர் விஜய் சந்திப்பை நடத்தி முடித்துள்ளார். இதில் தற்போதைய அரசியல் நிலவரம், 2026 சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதித்துள்ளனர். 

தற்போதைய நிலவரப்படி தமிழக வெற்றிக் கழகத்திற்கு சட்டமன்ற தேர்தலில் 8 முதல் 10 சதவீத வாக்குகள் வரை கிடைக்கக் கூடும் எனவும் தேர்தலுக்கு முன்பு விஜய் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மற்றும் தேர்தல் சமயத்தில் சுற்றுப்பயணம் என மக்களை சந்தித்தால் கூடுதலாக ஐந்து சதவீதம் வரை வாக்குகளை பெறலாம் எனவும் வாக்கு சதவீதம் கூடுவதற்கு இளைஞர்களின் ஓட்டு பெரிதும் உதவும் எனவும்  பிரசாந்த் கிஷோர் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை 30 சதவீதம் அல்லது அதற்கு மேல் வாக்கு சதவீதம் பெறக்கூடிய கட்சியே ஆட்சியை பிடிக்கும் என்பதால் பிரசாந்த் கிஷோர் தரப்பில் சொல்லப்பட்ட தமிழக வெற்றி கழகத்திற்கான வாக்கு சதவிகித கணக்கால் விஜய்க்கு குழப்பம் ஏற்பட்டது தான் மிச்சம் என்கின்றனர். தமிழக வெற்றிக் கழகத்திற்கு 15 சதவீத வாக்குகள் என வைத்துக் கொண்டாலும் அதே அளவிலான வாக்கு சதவீதம் இருக்கக்கூடிய கட்சியுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே கணிசமான இடங்களை பெற முடியும்.

குறைந்தபட்சம் கூட்டணி ஆட்சியாவது அமைக்க முடியும். அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்திற்கு கூட்டணிக்கான ஒரே தேர்வாக அதிமுக மட்டுமே  இருக்க முடியும். ஏற்கனவே  கூட்டணிக்கான தலைமையாக விஜய்யை  ஏற்றுக் கொள்ளும் காட்சிகளோடு மட்டுமே கூட்டணி என தமிழக வெற்றிக்கழகம் தெரிவித்துள்ளதால் அதிமுக போன்ற பெரிய கட்சி விஜயின் நிபந்தனையை ஏற்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதனால் அதிமுக கூட்டணி சாத்தியமாகுமா? என்கின்ற கேள்வியும் இருந்து வருகிறது.

அதிமுக தவிர்த்து நாம் தமிழர் கட்சி மட்டுமே எட்டு சதவீத வாக்குகளுடன் வலிமையாக உள்ளது. ஆனால் விஜய் மீதான சீமானின் விமர்சனத்தால் அந்த கூட்டணிக்கான வாய்ப்பும் குறைவாகவே உள்ளது. இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் 2026-ல் ஆட்சி என்ற லட்சியத்துடன் விஜய், அரசியல் களம் கண்டுள்ள நிலையில் அதிகபட்சம் 15 சதவீத வாக்குகள் தான் என விஜய்க்கு பிரசாந்த் கிஷோர் சொல்லி இருப்பது கலக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

 இப்போதைய நிலையில் ஆட்சியை பிடிக்கக்கூடிய அளவிற்கு வாக்கு சதவீதத்தை உயர்த்த வேண்டும் என்பது மட்டுமே தமிழக வெற்றி கழகத்தின் லட்சியமாக மாறியுள்ளது. ஒருபுறம் கூட்டணிக்கான கணக்குகளும் சாதகமாக இல்லாத நிலையில் திமுக தலைமையிலான கூட்டணியை எவ்வாறு வீழ்த்துவது? அதற்கான வியூகம் என்ன? என்பன போன்ற அம்சங்களால் விஜய் என்ன செய்யப் போகிறார்? என்கின்ற கேள்வி கட்சியின் தொண்டர்கள் மத்தியிலும் அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. கணக்குகள் கைகூடுமா? ஆட்சி என்கின்ற லட்சியம் நிறைவேறுமா? என்பதை 2026 தேர்தல் முடிவுகள் சொல்லும்.