ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் வெளியான 'பெத்தி' (Peddi) திரைப்படத்தில், கதாநாயகியின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ள விதம் குறித்து சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
புச்சி பாபு சனா இயக்கத்தில், ஸ்போர்ட்ஸ் டிராமா (Sports drama) பாணியில் உருவான 'பெத்தி' திரைப்படம்நேற்று (ஜூன் 4) திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியானதில் இருந்தே, இதில் ஜான்வி கபூர் நடித்துள்ள 'அச்சியம்மா' கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதம் குறித்துப் பார்வையாளர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது.
படத்தில் ராம் சரணின் கதாபாத்திரம், கதாநாயகிக்கு எதிராகச் செய்யும் சில செயல்கள் பெண்களைப் போகப்பொருளாகச் சித்தரிப்பது போல் இருப்பதாகப் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இது தொடர்பான குறிப்பிட்ட சில காட்சிகள் மற்றும் படத்தின் காட்சி அமைப்புகள் குறித்து சமூக வலைதளங்களில் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன.
இந்த விமர்சனங்கள் அனைத்தும் படத்தின் இயக்கம் அல்லது கதைக் களத்தை நோக்கியதாக இல்லாமல், கதாநாயகி கதாபாத்திரத்தின் எழுத்து வடிவம் குறித்தே எழுப்பப்பட்டுள்ளன. கதையின் ஓட்டத்திற்கு ஜான்வி கபூரின் கதாபாத்திரம் பெரிய அளவில் உதவவில்லை என்றும், அவர் வெறும் கவர்ச்சிப் பொருளாக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளார் என்றும் நெட்டிசன்கள் சாடி வருகின்றனர்.
ராம் சரண் மற்றும் ஜான்வி கபூருடன் இணைந்து விஜய் சேதுபதி, போமன் இரானி, திவ்யேந்து மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்தின் மீதான இந்த விமர்சனங்கள் தற்போது சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளன.