சினிமா

நடிகர் ரவி மோகன் வீட்டில் திருட்டு: போலீசில் பரபரப்பு புகார்!

By Christon
24 Jun 2026, 09:55 AM
நடிகர் ரவி மோகன் வீட்டில் தங்கம், வைரம் மற்றும் பணம் திருடுபோனதாகக் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் ரவி மோகன் வீட்டில் தங்கம், வைரம் மற்றும் பணம் திருடுபோனதாகக் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரவி மோகன் வீட்டில் திருட்டு

சென்னை நீலாங்கரை சேஷாத்திரி நகரில் வசித்து வரும் நடிகர் ரவி மோகனின் வீட்டின் லாக்கரிலிருந்து ரூ.3 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் ஒரு வைரச் சங்கிலி திருடுபோயுள்ளதாக நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரவி மோகனின் மேலாளர் கோகுல் கொடுத்துள்ள இந்தப் புகாரில், வீட்டில் பணியாற்றி வரும் இரண்டு ஓட்டுநர்கள், ஒரு தனி உதவியாளர் (PA), வீட்டுப் பணிப்பெண் மற்றும் அவரது மகன் ஆகிய 5 பேர் மீது சந்தேகம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் நீலாங்கரை போலீஸார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறைபிடிப்பு

முன்னதாக, ரவி மோகன் வீட்டில் வேலைக்குச் சென்ற தன் மனைவியும் மகனும் நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை என்று பணிப்பெண்ணின் கணவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்தார். அதன்பேரில் நீலாங்கரை போலீஸார் அங்குச் சென்று பார்த்தபோது, வீட்டில் நடந்த திருட்டு குறித்து பணிப்பெண்ணிடம் ரவி மோகன் தரப்பினர் விசாரணை நடத்திக் கொண்டிருந்ததால் அவர்கள் வீடு திரும்ப தாமதமானது தெரியவந்தது. "இதுபோன்று நீங்களாக விசாரிக்கக் கூடாது, முறைப்படி புகார் அளித்தால் நாங்கள் விசாரணை நடத்துகிறோம்" என்று போலீஸார் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, தற்போது ரவி மோகன் தரப்பில் இந்த அதிகாரப்பூர்வப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.