சினிமா

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: விசாரணையை நடத்தும் நீதிபதி திடீர் பணியிட மாற்றம்!

By Christon
30 Apr 2026, 12:09 PM
விஜய்- சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சசிகலா இடமாற்றம் செய்யப்பட்டார்.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், சங்கீதா தனது கணவர் விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். திருமணத்திற்கு மீறிய உறவு மற்றும் மன உளைச்சல் காரணமாக இந்த முடிவை எடுத்ததாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்தச் சூழலில், இவ்வழக்கை விசாரித்து வந்த குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சசிகலா தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, ஏற்கனவே இப்பொறுப்பில் இருந்த நீதிபதி சுஜாதா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜூன் மாதத்திற்கு ஒத்திவைப்பு

கடந்த 20-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பு வழக்கறிஞர்கள் மட்டுமே ஆஜராகியிருந்தனர். சம்பந்தப்பட்டவர்கள் எப்போது நேரில் ஆஜராவார்கள் என நீதிபதி கேள்வி எழுப்பியதற்கு, ஜூன் மாதம் நேரில் வர வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் மாதம் 15-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

நேரில் ஆஜராக உத்தரவு

விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ள ஜூன் 15-ஆம் தேதியன்று, விஜய் மற்றும் சங்கீதா ஆகிய இருவரும் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகித் தங்கள் தரப்பு விளக்கங்களை அளிக்க உள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்தாலும் தனித்தனியாகவே வாழ்ந்து வருவதாக சங்கீதா தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள வாதங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை புதிய நீதிபதியின் முன்னிலையில் நடைபெறவுள்ளது.