அண்மை

அதிவேக LPG லாரி டோல்கேட்டில் மோதி வெடிப்பு... தீப்பிழம்பான சுங்கச்சாவடி!

By Sumalekha
03 Jul 2026, 06:30 PM
உத்தரப்பிரதேசத்தில் டோல்கேட்டில் LPG டேங்கர் லாரி மோதி ஏற்பட்ட பயங்கர வெடிப்பில் சுங்கச்சாவடி தீப்பிடித்து 16 இருசக்கர வாகனங்கள், 2 கார்கள் எரிந்தன. 6 பேர் காயமடைந்த நிலையில், லாரி ஓட்டுநர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
உத்திரப்பிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள சிகோரி சுங்கச்சாவடியில் கடந்த ஜுன் 26 ஆம் தேதி அதிகாலை சமையல் எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து டோல்கேட்டில் மோதி பயங்கரமான சத்தத்துடன் வெடித்து சிதறிய வீடியோ இன்று வெளியாகி அனைவரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் சுங்கச் சாவடி ஊழியர்கள் 6 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் லாரியில் இருந்த ஓட்டுநர்கள் தப்பியோடியது தெரியவந்தது.


கான்பூரில் இருந்து பிரதாப்கர் நோக்கி அதிவேகமாக வந்த எல்பிஜி டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோதி பின்னர் அங்கிருந்த சுங்கச்சாவடி பூத் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் சில விநாடிகளிலே லாரியிலிருந்து எரிவாயு கசிந்து தீப்பிடித்தது. சுங்கச்சாவடி வளாகமே ஒரு பெரிய தீப்பிழம்பாக மாறி அங்கிருந்த 16 இருசக்கர வாகனங்களும் 2 கார்களும் முற்றிலும் கருகி சாம்பலாகின.


விபத்து ஏற்பட்ட உடனே லாரியிலிருந்த இரண்டு ஓட்டுநர்களும் வண்டியை விட்டு இறங்கி அங்கிருந்து தப்பியோடி உயிர் பிழைத்தனர். மேலும் அங்கு பணியிலிருந்த 6 சுங்கச்சாவடி ஊழியர்கள் காயம் அடைந்துள்ளனர்.‘காயம் அடைந்தவர்களில் 4 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் பிரயாக்ராஜில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்நிகழ்வு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சத்யநாராயனண் பிரஜாபத் தலைமையிலான காவல் துறையினர் தப்பியோடியவர்களை
தேடி வருவதுடின் விபத்து குறித்து தொழில் நுட்பக் குழுவினரின் உதவியோடு தீவிர விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர்.