தனக்கு டைபாய்டு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) நிறுவனர் அபிஜீத் தீப்கே, இந்த உடல்நலக்குறைவு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தும் போராட்டத்தை எந்த வகையிலும் பலவீனப்படுத்தாது என்று தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் வெளியிட்ட செய்தி
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அபிஜீத் தீப்கே, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தனக்கு டைபாய்டு பாதிப்பு இருப்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாகவும், நாள்தோறும் நரம்பு வழியே (IV) மருந்துகள் செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
ஆனாலும், நாடு முழுவதும் அமைதியான முறையில் போராட்டத்தைத் தொடர்ந்து வரும் ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், தொடர்ச்சியான அமைதிப் போராட்டம் மூலம் மத்திய கல்வி அமைச்சரின் ராஜினாமா என்ற முக்கியக் கோரிக்கையை நிச்சயம் வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
தொடரும் ஜந்தர் மந்தர் போராட்டம்
நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இப்போராட்டத்திற்கு ஆதரவாக 26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், போராட்டக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படாது, நாடாளுமன்றத்தில் தேர்வுச் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்கப்படும் மற்றும் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது நேர்மறையாகப் பரிசீலிக்கப்படும் என மத்திய அரசு அளித்த எழுத்துப்பூர்வ உறுதிமொழியைத் தொடர்ந்து தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். இருப்பினும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தன் பதவியை ராஜினாமா செய்யும் வரை டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடரும் என்று காக்ரோச் ஜனதா கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.