காங்கிரஸ் மேலிடத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, கர்நாடக முதல்வர் பதவியைச் சித்தராமையா இன்று அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, புதிய முதல்வராக டி.கே.சிவகுமார் விரைவில் பொறுப்பேற்கவுள்ளார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அப்போது மூத்த தலைவர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இடையே முதல்வர் பதவிக்குப் பலத்த போட்டி நிலவியது. இறுதியாகச் சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவகுமார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர். தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியான நிலையில், கடந்த சில தினங்களாக டெல்லியில் ராகுல் காந்தியுடன் நடைபெற்ற நீண்ட நேர ஆலோசனைகளுக்குப் பிறகு சித்தராமையா தனது பதவியை விட்டுக்கொடுக்கச் சம்மதித்தார்.
பதவி விலகலுக்கு முன்னதாக, இன்று காலை தனது இல்லத்தில் அமைச்சர்களுக்குச் சித்தராமையா காலை உணவு விருந்து அளித்தார். இதில் கலந்துகொண்ட டி.கே.சிவகுமார், சித்தராமையாவிடம் ஆசி பெற்றார். இதனைத் தொடர்ந்து இன்று மாலை ஆளுநர் மாளிகைக்குச் சென்ற சித்தராமையா தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். கவர்னர் தாவர்சந்த் கெலாட் டெல்லியில் இல்லாததால், அவரின் சிறப்புச் செயலர் பிரபு சங்கர் இக்கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.
புதிய முதல்வரைத் தேர்வு செய்வதற்காக இன்று மாலை காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் புதிய முதல்வராக டி.கே.சிவகுமார் தேர்ந்தெடுக்கப்படுவது 100 சதவீதம் உறுதியாகியுள்ளது.