இந்தியா

கர்நாடகத்தில் 1 கோடிக்கும் மேலானோர் அவுட் ! ஒரே போடாக போட்ட தேர்தல் ஆணையம்!

By Sumalekha
25 Aug 2026, 10:31 AM
வாக்காளர் வரைவு பட்டியலினுக்கான SIR திருத்தம் தமிழ்நாட்டில் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கியிருந்த நிலையில், தற்போது கர்நாடகாவில் 1 கோடிக்கும் மேலானோர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது....
வாக்காளர் வரைவு பட்டியலினுக்கான SIR திருத்தம் தமிழ்நாட்டில் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கியிருந்த நிலையில், தற்போது கர்நாடகாவில் 1 கோடிக்கும் மேலானோர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது....

கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட SIR (Special Intensive Revision – சிறப்பு தீவிர திருத்தம்) பணியின் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 24-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 4.46 கோடி வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், சுமார் 1.08 கோடி வாக்காளர்கள் ASDDO பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

SIR என்றால் என்ன?

SIR என்பது வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்கள் மற்றும் விவரங்களை நேரடியாகச் சரிபார்த்து, தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் முறையாக இடம்பெறுவதை உறுதி செய்யும் சிறப்பு திருத்த நடவடிக்கையாகும்.

கர்நாடகாவில் இந்தப் பணியின் கீழ் Booth Level Officers (BLOs) வீடு வீடாகச் சென்று வாக்காளர்களின் விவரங்களைச் சரிபார்த்தனர். ஜூன் 30-ம் தேதி தொடங்கிய இந்த வீடு வீடான கணக்கெடுப்பு பணி ஆகஸ்ட் 17-ம் தேதி நிறைவடைந்தது.

இந்தச் சரிபார்ப்பில் ஒரே நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பதிவு, நிரந்தரமாக வேறு இடத்துக்குக் குடிபெயர்ந்தவர்கள், உயிரிழந்தவர்கள், முகவரியில் இல்லாதவர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலைகள் கண்டறியப்பட்டன.

1.08 கோடி பெயர்கள் ஏன் ASDDO பிரிவில்?

SIR பணிக்குப் பிறகு சுமார் 1,07,96,339 வாக்காளர்கள் ASDDO பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் Absent, Permanently Shifted, Dead, Duplicate மற்றும் Other போன்ற பிரிவுகள் அடங்கும்.

இதில் பெயர் இடம்பெறாதது என்றால் அந்த வாக்காளர் நிரந்தரமாக வாக்குரிமையை இழந்துவிட்டார் என்று அர்த்தமில்லை. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தகுதியுள்ளவர்கள் தங்களது பெயரை மீண்டும் சேர்க்க கோரிக்கை மற்றும் ஆட்சேபனை அளிக்க வாய்ப்பு உள்ளது.

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா?

SIR-க்குப் பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லாததை முதலில் சரிபார்க்க வேண்டும்.

பெயர் தவறுதலாக விடுபட்டிருந்தால், Form 6 மூலம் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம். வெளிநாட்டில் வசிக்கும் இந்திய வாக்காளர்கள், அதாவது Overseas/NRI Electors, Form 6Aமூலம் விண்ணப்பிக்கலாம்.

அதேபோல், இறந்த நபரின் பெயர் இன்னும் வாக்காளர் பட்டியலில் இருந்தால் அதை நீக்க Form 7 பயன்படுத்தலாம். வாக்காளர் முகவரி மாற்றம் அல்லது பட்டியலில் உள்ள விவரங்களைத் திருத்துவதற்கு Form 8 பயன்படுத்தலாம்.

எப்போது வரை விண்ணப்பிக்கலாம்?

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து Claims and Objections எனப்படும் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யும் காலம் தொடங்கியுள்ளது. தற்போதைய அட்டவணைப்படி, இந்த நடைமுறை ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 23 வரை நடைபெறுகிறது. அதன்பிறகு, அறிவிப்பு வழங்குதல் மற்றும் கோரிக்கைகள்/ஆட்சேபனைகளை பரிசீலிக்கும் நடைமுறை அக்டோபர் 22 வரை தொடரும். இறுதி வாக்காளர் பட்டியல் அக்டோபர் 27-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

என்னென்ன ஆவணங்கள் தேவை?

வாக்காளர் பெயர் சேர்ப்பு அல்லது தங்களது தகுதியை நிரூபிக்க வேண்டிய சூழலில், தேவையான ஆதார ஆவணங்களைத் தயாராக வைத்திருப்பது முக்கியம்.

பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட், பள்ளி அல்லது கல்விச் சான்றிதழ், முகவரிச் சான்று மற்றும் அரசு வழங்கிய அடையாள ஆவணங்கள் போன்றவை தேவைக்கேற்ப சமர்ப்பிக்கப்படலாம்.

யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்?

தங்களது கோரிக்கை மற்றும் தேவையான ஆவணங்களை சம்பந்தப்பட்ட Electoral Registration Officer (ERO) அல்லது உரிய தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்கலாம். அதிகாரிகள் ஆவணங்கள் மற்றும் தகவல்களை ஆய்வு செய்து, தகுதியின் அடிப்படையில் பெயர் சேர்ப்பு அல்லது தேவையான திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

முக்கியமாக, வரைவு பட்டியலில் பெயர் இல்லாததை பார்த்தவுடன் பதற்றப்பட வேண்டியதில்லை. SIR நடைமுறையில் விடுபட்ட அல்லது தவறாக வகைப்படுத்தப்பட்ட தகுதியான வாக்காளர்களுக்கு தங்களது கோரிக்கையை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எனவே, கர்நாடகாவில் வசிக்கும் வாக்காளர்கள் முதலில் வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா என்பதைச் சரிபார்த்து, பெயர் விடுபட்டிருந்தால் காலக்கெடுவுக்குள் உரிய படிவத்தைச் சமர்ப்பிப்பது அவசியம்.