இந்தியா

ஜனநாயகத்துக்கு எதிரான சவால்... அவசரநிலையை பாடமாக்கிய என்சிஇஆர்டி

By Sumalekha
25 Jun 2026, 04:26 PM
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) வெளியிட்டுள்ள புதிய பாடத்திட்டத்தின் கீழ், 1975-77 காலகட்டத்தில் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட தேசிய அவசரநிலை (Emergency) குறித்த பாடம் 9-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
சமூகத்தைப் புரிந்துகொள்ளுதல், இந்தியா மற்றும் அதற்கு அப்பால்" (Understanding Society: India and Beyond) என்ற சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், ஜனநாயகத்துக்கு எதிரான சவால் என்ற தலைப்பின் கீழ் இந்தப் பகுதி இடம்பெற்றுள்ளது.

அந்தப் பாடத்தில், 1975 ஜூன் மாதத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமது தேசிய அவசரநிலையை அறிவித்தது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

மேலும், அவசரநிலை அமலில் இருந்த 1975 முதல் 1977 வரையிலான காலகட்டத்தில் மக்களின் அடிப்படை உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்டன, பத்திரிகைகளுக்கு தணிக்கை விதிக்கப்பட்டது, அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கைது செய்யப்பட்டனர் என்பதையும் பாடப்புத்தகம் குறிப்பிடுகிறது.

இந்திய ஜனநாயக வரலாற்றின் முக்கியமான அத்தியாயமாகக் கருதப்படும் அவசரநிலை குறித்து பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் இந்தப் புதிய பாடம் சேர்க்கப்பட்டிருப்பது கல்வி மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.