இந்தியா

பத்ம விருதுகள் வழங்கிய ஜனாதிபதி முர்மு... மம்முட்டி, மாதவன், ரோகித் சர்மாவுக்கு உயரிய கவுரவம் !

By Sumalekha
23 Jun 2026, 08:47 PM
நடிகர்கள் மம்முட்டி, மாதவன், கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.
கலை, இலக்கியம், சமூக சேவை, மருத்துவம், அறிவியல் போன்றவற்றுக்காக வழங்கப்படும் நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம்.
பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ போன்ற பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இதன்படி இந்த ஆண்டும் அறிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டு 5 பத்ம விபூஷண் விருதுகள், 13 பத்மபூஷண் விருதுகள் மற்றும் 113 பத்மஸ்ரீ விருதுகள் என மொத்தம் 131 விருதுகளை உள்துறை அமைச்சகம் அறிவித்தது. இதில் முதற்கட்டமாக கடந்த மாதம் 25-ந்தேதி 66 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக இன்று 65 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்று வரும் இந்த விருது வழங்கும் விழாவில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

நடிகர் மம்முட்டி, மாதவன், கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ், தமிழகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவத்சலம், சிற்பக் கலைஞர் ராஜஸ்தபதி கலியப்ப கவுண்டர் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு கவுரவித்தார்