மாணவர்களின் போராட்டங்கள் குறித்து மக்களவையில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "இளைஞர்களின் கருத்தை முட்டாள்கள் கேட்பதில்லை" என்று பேசியதைத் தொடர்ந்து, ஆளும் பாஜக எம்பிக்கள் அவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
மக்களவையில் இன்று உரையாற்றிய ராகுல் காந்தி, மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையோ அல்லது வெறுப்போ அல்ல என்றும், அது நாட்டின் இளைஞர்களின் எதிர்காலம் குறித்த கவலைகளையும் எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்தும் ஜனநாயகப்பூர்வமான நிகழ்வு என்றும் குறிப்பிட்டார். இந்த போராட்டத்தை எந்தவொரு அரசியல் கட்சியும் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது எனக் கூறிய அவர், பாஜக தலைவர்கள் தங்கள் சொந்தக் குழந்தைகளிடம் பேசினால் கூட, அவர்கள் போராட்டத்தை ஆதரிப்பதை அறிய முடியும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, இளைஞர்களின் கருத்துகளை முட்டாள்கள் மட்டுமே கேட்க மாட்டார்கள் எனக் கூறியது அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வார்த்தைப் பிரயோகத்திற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்துத் தலையிட்ட மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, விவாதத்திற்குத் தொடர்புடைய கருத்துகளை மட்டுமே பேசுமாறு ராகுல் காந்திக்கு அறிவுறுத்தினார். அதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, தாம் மாணவர் என்றால் யார் என்ற விளக்கத்தையே அளிப்பதாகவும், யாரையும் பெயரைக் குறிப்பிட்டுப் பேசவில்லை என்றும் தெரிவித்தார். இருப்பினும், அவரது விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத ஆளுங்கட்சி உறுப்பினர்களின் தொடர் எதிர்ப்பால் அவையில் சலசலப்பு நீடித்தது.