இந்தியா

என் குடும்பத்தையே மிரட்டுனாங்க..! பாஜக மீது அபிஜீத் திப்கே பரபரப்பு குற்றச்சாட்டு!

By Christon
31 Jul 2026, 11:48 AM
பாஜகவில் இணைய தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக அபிஜீத் திப்கே தெரிவித்துள்ளார்.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் (CJP) நிறுவனர் அபிஜீத் திப்கே, பாஜகவில் இணையுமாறு தனக்கு மிரட்டல்கள் வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மத்திய அரசு, கல்வி முறை மற்றும் அரசியல் கட்சிகள் குறித்தும் அவர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம், சத்ரபதி சம்பாஜிநகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். போராட்டத்தின் போது தனக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வந்ததாகக் கூறிய அபிஜீத் திப்கே, பாஜகவில் இணையாவிட்டால் தனது குடும்பத்திற்குப் பிரச்சினைகள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் உள்ளிட்ட உயர் பொறுப்பில் இருப்பவர்களால் தன்னைப்போன்ற ஒரு மாணவர் குறிவைக்கப்படுவது வெட்கக்கேடானது எனக் குறிப்பிட்ட அவர், இளைஞர்களை மிரட்ட வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.

இளைய தலைமுறையைத் தவறாக வழிநடத்துவதாகத் தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அவர், அரசுக்கு எதிராகக் கேள்விகளை எழுப்புவதும், ஜனநாயகத்தைக் காப்பதும், கல்வி உரிமைக்காகப் போராடுவதும் தவறென்றால், அப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பேன் என்றார்.

போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு எதுவும் நடக்கவில்லை என பாஜக மறுத்து வரும் நிலையில், தான் நேரில் பீகார் மருத்துவமனைகளுக்குச் சென்று காயமடைந்த மாணவர்களைச் சந்தித்ததாகத் திப்கே குறிப்பிட்டார். பயங்கரவாதிகளை எதிர்கொள்ளப் பயன்படுத்தப்படும் ஏகே-47 போன்ற ஆயுதங்கள் மற்றும் பெல்ட் துப்பாக்கிகள் மாணவர்கள் மீது பிரயோகிக்கப்பட்டதாகவும், இதனால் பலர் காயமடைந்து சிலர் பார்வையை இழந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

ஜனநாயகத்தைக் காக்க அனைத்து அரசியல் கட்சிகளும் குடிமக்களும் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்த அவர், போராட்டம் முடிந்த பிறகும் மாணவர்கள் மிரட்டப்படுவதும் கைது செய்யப்படுவதும் தொடர்வதாகத் தெரிவித்தார். அரசின் இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயக மதிப்புகளுக்கு அளிக்கப்படும் மரியின்மையையே காட்டுகிறது என்றும் அவர் சாடினார்.