அரசியல்

சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவிகள் பறிப்பு; இபிஎஸ் அதிரடி!

By Christon
16 Jul 2026, 11:23 AM
சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரின் கட்சிப் பதவிகளைப் பறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சிப் பூசல் வெடித்துள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரின் கட்சிப் பதவிகளைப் பறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, கட்சியில் சி.வி.சண்முகம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இரு அணிகள் உருவாயின. பின்னர் கட்சி ஒன்றிணைந்தாலும், சி.வி.சண்முகம் தனது இறுதி நிலைப்பாட்டை அறிவிக்காமல் உள்ளார்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டப் புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட பசுபதி தரப்பினருக்கும், சி.வி.சண்முகம் ஆதரவாளர்களுக்கும் இடையே தொடர் மோதல்கள் ஏற்பட்டு வந்தன. சமீபத்தில் திண்டிவனம் மற்றும் செஞ்சியில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் இருதரப்பினருக்கும் இடையே கடுமையான அடிதடி வெடித்தது. இதில் பசுபதியின் ஆதரவாளர் தாக்கப்பட்டதோடு, மாவட்டச் செயலாளர் பசுபதியின் காரின் மீதும் கல்வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த 11 முக்கிய நிர்வாகிகளைப் பதவியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, மாவட்டக் கழக இணைச் செயலாளர் ஆனந்தி, மாவட்டப் பொருளாளர் கே.வி.என்.வெங்கடேசன், பாசறைச் செயலாளர் ஜெயபிரகாஷ், அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் பாஸ்கரன், ஐடி விங் இணைச் செயலாளர் எழில்ராஜ் மற்றும் ஒன்றிய, நகரச் செயலாளர்களான கிருஷ்ணன், விஜயன், கிருஷ்ணமூர்த்தி, பன்னீர், ரூபன்ராஜ், செந்தில்குமார் ஆகியோர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கைக்குச் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் தற்போது கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் விழுப்புரத்தில் பரபரப்பு நிலவுகிறது.