மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசைக் கண்டித்தும், விவசாயக் கடன் தள்ளுபடி என்ற தவெக அரசின் தேர்தல் வாக்குறுதியை முறையாக நிறைவேற்றக் கோரியும் தஞ்சாவூரில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ஆடிப் பெருக்கு நாளில் ஆறுகளில் தண்ணீர் பெருகி ஓட வேண்டிய சூழலில், டெல்டா பகுதிகள் நீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. திமுக ஆட்சியில் இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா?
தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் நிர்வாகத் திறனின்மையே குறுவைச் சாகுபடி பாதிக்கப்பட்டதற்குக் காரணம். விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் முதலமைச்சர் இதுகுறித்துப் பேசாமல் மெளனம் காக்கிறார்" என்று குற்றம்சாட்டினார்.
மேலும், "காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியை நடத்தி வருவதால், கர்நாடக அரசை எதிர்த்துக் காவிரி நீரைத் திறந்துவிடுமாறு தட்டி கேட்க முதலமைச்சர் அஞ்சுகிறார். மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல், திமுக மீது எந்த வழக்குகளைப் பதிவு செய்யலாம் என்பதிலேயே அரசு கவனம் செலுத்துகிறார் முதலமைச்சர் விஜய்.
விவசாயிகள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் போது தமிழ்நாடு அமைச்சர்கள் படம் பார்த்து கண்ணீர் வடிக்கின்றனர். லாட்டரி விற்ற அமைச்சர், பிளாக் டிக்கெட் விற்ற அமைச்சர், போதைப்பொருளுடன் சுற்றும் அமைச்சர் என தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த அமைச்சர்களும் ஜோக்கர்களாக உள்ளனர். எந்தவொரு பிரச்சனை எழுந்தாலும் மாலை வேளையில் ஏதேனும் ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு விஷயத்தைத் திசைதிருப்பும் வேலையையே முதலமைச்சர் செய்து வருகிறார்" என்று விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "மகாராஷ்டிராவில் தமிழக விவசாயிகள் பாதிக்கப்பட்ட போதும் முதலமைச்சர் குரல் கொடுக்கவில்லை என்றும், கர்நாடகா செல்வதாகக் கூறி நாடகம் மட்டுமே ஆடியதாகவும் அவர் சாடினார். வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விளம்பர அரசியலில் மட்டுமே ஈடுபடும் அரசாகத் தவெக அரசு செயல்பட்டு வருவதாகக் அவர் கூறினார்.