தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதி கட்டப் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் நடைபெற்ற பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.
நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக இன்று தமிழகம் வந்த ராகுல் காந்தி, குளச்சலில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினார். தனது உரையைத் தொடங்குவதற்கு முன்பாக, விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பதே இந்தத் தேர்தலின் முக்கிய நோக்கம் என்பதை அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.
அதிமுகவை கைப்பற்றிய பாஜக
"இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்துவமான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். ஆனால், பாஜக ஒரே மரபு, ஒரே மொழி என்ற கொள்கையுடன் மற்ற அனைத்தையும் ஆதிக்கம் செலுத்த விரும்புகிறது. தமிழ்நாட்டைத் டெல்லியில் இருந்து ஆள வேண்டும் என்று பாஜக துடிக்கிறது.
இந்த விருப்பத்தைத் தமிழ்நாட்டு மக்களிடம் நேரடியாகச் சொல்லும் துணிவு பாஜகவிற்கு இல்லை. அதனால் அவர்கள் அதிமுகவைக் கைப்பற்றியிருக்கிறார்கள். ஊழல் குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து அதிமுக தலைமை பாஜகவிடம் சரணடைந்துவிட்டது. இன்று அதிமுக என்பது வெறும் ஓடாக மாறி, பாஜக தமிழகத்திற்குள் நுழைவதற்கான கருவியாகப் பயன்பட்டு வருகிறது.
ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை எதிர்த்து நிற்கக்கூடியவர்கள் தமிழர்கள் என்பதும், தமிழ் மக்கள் ஒருபோதும் அவர்களுக்கு அடிபணிய மாட்டார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும். அதனால்தான் அதிமுக வாயிலாக ஊடுருவும் உத்தியைக் கையாள்கிறார்கள்.
ஆர்எஸ்எஸ் - அதிமுக திட்டத்தை நாம் முறியடிப்போம்
சில நாள்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு என்ற பெயரில் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க பிரதமர் முயன்றார்; அதனை எதிர்க்கட்சிகள் இணைந்து முறியடித்தோம். அமைதியான மணிப்பூர் இன்று பற்றி எரிகிறது. ஆர்எஸ்எஸ் - பாஜகவின் திட்டத்தை தமிழக மக்கள் முறியடிக்க வேண்டும். தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டை மோடியிடம் ஒப்படைக்கும் ஆர்எஸ்எஸ் - அதிமுக திட்டத்தை நாம் முறியடிப்போம்" என்று தெரிவித்தார்.