அரசியல்

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

By Christon
06 Jul 2026, 11:37 AM
கரூர் சம்பவம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான வழக்கு நாளை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாகப் பேசிய விவகாரத்தில், தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு எதிராக திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவசர வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவத்தைக் குறிப்பிட்டுப் பேசிய தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "காவல்துறையினரை வைத்து எங்கள் மக்களைக் கொன்று குவித்தார்கள்; கரூர் மக்களின் கண்ணீரின் பாவத்தால் தான் ஸ்டாலின் கொளத்தூரில் தோற்றார்" என்று அண்மையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.

இந்த சர்ச்சை பேச்சுக்கு எதிராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், கரூர் சம்பவம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆற்றிய பொறுப்பற்ற, தவறான மற்றும் தீய நோக்கம் கொண்ட மரியாதையற்ற பேச்சுக்கு எதிராகத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

திமுக தாக்கல் செய்துள்ள மனுவில், "ஆதவ் அர்ஜுனாவின் இத்தகைய பேச்சு திமுக, அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக காவல்துறைக்கு எதிராக ஒரு பொய்யான பிம்பத்தை உருவாக்குவதோடு, பொதுமக்களின் கருத்தைத் திசை திருப்பவும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தற்பொழுது நடைபெற்று வரும் விசாரணையில் நேரடியாகத் தலையிடவும் முயல்கிறது" என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த விவகாரத்தின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு திமுக தரப்பில் வைக்கப்பட்ட அவசர முறையீட்டை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படி, இந்த வழக்கு நாளை (ஜூலை 7) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.