அரசியல்

காவிரி விவகாரம்: முதலமைச்சர் விஜய்க்கு கேட்டை சாத்திவிட்டார்கள்..! ஸ்டாலின் கடும் விமர்சனம்..!

By Christon
01 Aug 2026, 01:13 PM
"முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடகாவினர் கேட்டை சாத்திவிட்டார்கள்" என்று திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்லத் திட்டமிட்டிருந்தார். ஆகஸ்ட் 3-ஆம் தேதி இதற்கான சந்திப்பு நடைபெறவிருந்த நிலையில், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார், தற்போதைய சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகா வர வேண்டாம் என்றும், அது தேவையற்ற பதற்றத்தையும் போராட்டங்களையும் உருவாக்கும் என்றும் கூறி அச்சந்திப்பைத் தவிர்த்துவிட்டார்.

இந்த நிலையில், "முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடகாவினர் கேட்டை சாத்திவிட்டார்கள்" என்று திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்துத் தனிமைப்பட்டு நிற்கிறார் முதலமைச்சர்.

தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் சங்கத்தினர் எல்லோரும் மேகதாது விவகாரத்தில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனளிக்காது என்று எச்சரித்தோம். கர்நாடகம் செல்ல வேண்டாம் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கோரிக்கை வைத்தோம்.

தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரமுடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்ட மாநிலத்துடன் சட்டரீதியாகத்தான் போராட வேண்டும் என்பதே கடந்தகாலத்தில் நாம் பெற்ற படிப்பினை. உபரிநீரை வெளியேற்றும் வடிகால் பகுதியாகத்தான் அவர்கள் தமிழ்நாட்டைப் பார்க்கிறார்கள்.

ஆனால், தான் கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் நினைத்தாரோ என்னவோ... நமது எச்சரிக்கைகளை மீறி கர்நாடகம் செல்வதற்குத் தூது அனுப்பினார்.

தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடச் சொல்லி CWMA உத்தரவிட்டதும் "நீங்கள் இப்போதைக்கு வரவேண்டாம்" என்று கேட்டைச் சாத்திவிட்டார்கள்.

இதுபோன்ற சூழ்நிலைகளை முன்பே கணித்துதான், தமிழ்நாட்டிலுள்ள அனைவரும் எச்சரித்தோம். இனியேனும் தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினையான காவிரி விவகாரத்தை முதலமைச்சர் ஆலோசனைகளோடு அணுக வேண்டும்.

நமது முதலமைச்சரை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு, கர்நாடகத்தில் ஆகஸ்ட் 2 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அம்மாநில முதலமைச்சர் அழைப்பு விடுத்து அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதைத் தனது செயலால் உணர்த்திவிட்டார். முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? முடியுமா முடியாதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.