தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் இன்று காலை முன்மொழியப்பட்டது. பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு 144 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர்.
முன்னதாக இந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: "தவெக ஆட்சி அமைக்க வேண்டுமென்று பெரும்பான்மை மக்கள் வாக்களிக்கவில்லை. உங்கள் கட்சிக்கு எதிராக 65 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
நமது சட்டப்பேரவையில் மேஜிக் நம்பரான 118 உறுப்பினர்கள் இருந்தால்தான் ஆட்சிக்கு வர முடியும். உங்கள் கட்சிக்கு 108 தான் இருக்கிறது. விஜய்க்கு வெற்றி நம்பிக்கை இல்லாததால் இரண்டு இடங்களில் போட்டியிட்டு ஒன்றை ராஜினாமா செய்துள்ளார். குறிப்பாக தொகுதி மக்களுக்கு இன்னும் நன்றிகூட தெரிவிக்காமல் ராஜினாமா செய்துள்ளார்.
திமுகவின் ஆதரவோடு வெற்றி பெற்ற எங்கள் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடுதான் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைத்துள்ளீர்கள். குடியரசுத் தலைவர் ஆட்சியைத் தடுக்கவே அவர்கள் ஆதரவு அளித்துள்ளார்கள். அவர்கள் எங்கள் கூட்டணியில்தான் தொடர்வதாக தெரிவித்துள்ளனர்.
விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட் காட்சிகள் மதசார்பற்ற கொள்கை அடிப்படையில்தான் ஆதரவு கொடுத்தார்கள். ஆனால், என்டிஏ கூட்டணியில் நின்றவரை அவரது கட்சி தலைவருக்கு தெரியாமலேயே உங்களுக்கு ஆதரவாக கொண்டு வந்துள்ளீர்கள். தேர்தலில் ஊழல் சக்தி எனக் கூறினீர்கள். தற்போது ஊழல் சக்தியுடன் சேர்ந்திருக்கும் உங்கள் ஆட்சி என்ன சக்தி என்று மக்கள் கேட்கத் தொடங்கியுள்ளார்கள். உங்கள் அரசு எத்தனை நாள் நீடிக்கும் எனக் கேள்வி எழுப்பப்படுகிறது.
மக்கள் தீர்ப்பால் பதவி நாற்காலி கிடைக்காத காரணத்தால், 'சோபா' அரசியலை அரங்கேற்றும் த.வெ.க. அரசின் மீது பெரும்பான்மை மக்களுக்கு நம்பிக்கை இல்லை. புஷ்பா பட பாணியில் 'சோபா' ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் முதல்வர். மாற்றம் என்று கூறுகிறீர்களே, இதன் பின்னணியில் பரிமாற்றம் இருக்கிறதோ என மக்களுக்கு கேள்வி எழுகிறது.
பிரசாரத்தில் 'மற்றும் சிலர்' கட்சிகள் எனக் கூறிய கட்சியின் சிலரின் ஆதரவுடன் ஆட்சி நடத்த முயற்சிக்கிறார் முதல்வர் விஜய். அவருக்கு அமைச்சர் பதவியும் கொடுக்க விரும்புகிறார். பெருமான்மையும் நேர்மையும் இல்லாத அரசு எப்படி நல்லாட்சி தரும்.
மு.க. ஸ்டாலின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களான மகளிர் உரிமைத் தொகை, நான் புதல்வன் உள்ளிட்ட திட்டங்களின் பயனர்கள் தொகைக்காக காத்துள்ளீர்கள். விரைவில் அந்த தொகையை வரவு வையுங்கள். நீங்கள் கொடுத்த கவர்ச்சி வாக்குறுதிகளில் ஒரு சிலவற்றையாவது நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறார்கள். முதல் கையெழுத்து அவற்றில் ஒன்றாக இருக்கும் என நம்பினார்கள்.
எங்கள் ஆதரவு இல்லை என்றாலும் நீங்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற போகிறீர்கள். அதனால் நாங்கள் வெளிநடப்பு செய்யப் போகிறோம். வெற்றி பெறுவதற்கான எண்ணிக்கை குறையும். வெற்றி பெற்று ஆட்சி செய்யுங்கள்" என்றார்.
இதனைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.