அரசியல்

திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிவு.. தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு!

By Christon
06 May 2026, 11:18 AM
தமிழக அரசியல் வரலாற்றில் நீண்டகாலமாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி தற்போது முடிவுக்கு வரும் சூழல் உருவாகியுள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றில் நீண்டகாலமாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி தற்போது முடிவுக்கு வரும் சூழல் உருவாகியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் முன்வந்துள்ளதால் இந்த அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2004-ம் ஆண்டு உருவான திமுக - காங்கிரஸ் கூட்டணி, தமிழக அரசியலில் மிக ஆழமான உறவைக் கொண்டது. 2006, 2019 மற்றும் 2021 ஆகிய தேர்தல்களில் இக்கூட்டணி மாபெரும் வெற்றிகளைப் பதிவு செய்தது. இருப்பினும், தற்போது நடந்து முடிந்துள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதேவேளையில், 108 இடங்களில் வென்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க இன்னும் 11 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

தவெக-விற்கு காங்கிரஸ் ஆதரவு

தவெக ஆட்சி அமைக்கத் தேவையான மெஜாரிட்டியை எட்ட காங்கிரஸ் ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதால், திமுக உடனான அதன் பல ஆண்டு கால உறவு முடிவுக்கு வருகிறது. இதற்காக ராகுல் காந்தி தவெக தலைவருடன் கரம் கோர்க்கத் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடதுசாரிகளுடன் ராகுல் பேச்சுவார்த்தை

காங்கிரஸ் ஆதரவு மட்டுமின்றி, தவெக ஆட்சி அமைக்கத் தேவையான கூடுதல் பலத்தைச் சேர்க்கும் வகையில் இடதுசாரித் தலைவர்களுடனும் ராகுல் காந்தி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். டெல்லி அளவில் இடதுசாரித் தலைவர்களுடன் ராகுல் காந்தி நடத்தி வரும் இந்தப் பேச்சுவார்த்தை, தமிழக அரசியலில் ஒரு புதிய அதிகார மையத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.