கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் மற்றும் தவெக அமைச்சர்கள் பொதுவெளியில் பேச தடை விதிக்கக் கோரியும் கரூர் செல்ல முதல்வருக்கு தடை விதிக்கவும் கோரி திமுக தாக்கல் செய்த இடையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, திமுக தரப்பு அந்த மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.
கடந்த 2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் தவெக நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்தச் சூழலில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், "சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வரும் வேளையில், வழக்கின் தன்மையை மாற்றும் வகையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொதுவெளியில் அவதூறாகப் பேசி வருகிறார். எனவே, சி.பி.ஐ. விசாரணையின் நடுநிலைமையைக் காக்க முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோர் இந்த வழக்கு குறித்துப் பேச தடை விதிக்க வேண்டும்" எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று (ஜூலை 7) நீதிபதிகள் விஸ்வநாதன் மற்றும் அலோக் ஆராதே அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முதலமைச்சர் விஜய்யைக் குற்றம் சாட்டப்பட்டவர் என்று குறிப்பிட்ட திமுக வழக்கறிஞருக்கு நீதிபதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். "திமுக ஆட்சியில் இருந்தபோது கூட விஜய் பெயர் குற்றவாளிகள் பட்டியலில் இல்லை; பேச்சுரிமைக்கு எப்படித் தடை விதிக்க முடியும்? அரசியல் எதிரிகளின் கருத்துகளுக்கு நீதிமன்றம் எப்படி உத்தரவிட முடியும்? உச்ச நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்காதீர்கள்" என்று நீதிபதிகள் கடுமையான கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், மனுவைச் சரியாகத் தயாரிக்காமல் வாதாடினால் வழக்கை தள்ளுபடி செய்வோம் என்றும் எச்சரித்தனர். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தியதைத் தொடர்ந்து, திமுக தரப்பு வழக்கறிஞர் தனது மனுவைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக ஒப்புக்கொண்டு, வழக்கை வாபஸ் பெற்றார்.