அரசியல்
"யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம்"- திமுகவினருக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்!
திமுக தோழர்கள் யாரையும் இந்த நேரத்தில கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகளுக்கு மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியிருக்கிறார்.
திமுக தோழர்கள் யாரையும் இந்த நேரத்தில கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகளுக்கு மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியிருக்கிறார்.
திமுக கூட்டணியில் போட்டியிட்ட ஐயூஎம்எல் மற்றும் விசிக ஆகிய காட்சிகள் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை வன்மையாகக் கண்டித்து திமுக எம்.பி. ஆ. ராசா எக்ஸ் பக்கத்தில் கருத்தைப் பதிவிட்டு பிறகு அதனை நீக்கி வேறு ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
அதற்கு விடுதலைச் சிறுத்தைகள் தரப்பிலும் கடுமையான பதில் கொடுக்கப்பட்டிருந்தது. இதுநாள்வரை ஒரு கூட்டணியிலிருந்தவர்கள் தற்போது ஒருவரை ஒருவர் கடுமையாகப் பேசிக் கொள்வது திமுக ஆதரவாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் வன்னியரசு (விசிக), ஷாஜஹான் (ஐயூஎம்எல்) அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்.
பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்" என்று பதிவிட்டுள்ளார்.