தவெக ஆட்சி அமைந்த 100 நாட்களில் ரீல்ஸ் போடுவதிலும், ரீல் விடுவதிலும்தான்கவனம் செலுத்தியதே தவிர, மக்களுக்கான புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என்றுஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட முதலமைச்சர் விஜய் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டும் முயற்சியை முழுமையாக தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
தவெக அரசின் 100 நாள் ஆட்சியில் மக்களுக்கான எந்த புதிய திட்டத்தையும் காண முடியவில்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, விவசாயிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக சுட்டிக்காட்டினார்.
“மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கு பதிலாக ரீல்ஸ் போடுவதிலும், ரீல் விடுவதிலும்தான் தவெக அரசு கவனம் செலுத்துகிறது” என அவர் விமர்சித்தார்.
மேலும், பட்ஜெட்டில் ஏற்கனவே உள்ள திட்டங்களின் பெயர்களை மாற்றி வெற்றி என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், சொத்து வரி உயர்வு தற்போது தொடங்கியுள்ளது என்றும், எதிர்காலத்தில் மேலும் பல வரிகள் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தவெக அரசு மூன்று மாதங்களில் ரூ.20 ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளதாகவும், அதே காலகட்டத்தில் ரூ.17 ஆயிரம் கோடி வருவாய் செலவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
காவிரி விவகாரம் குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரை பெற்றுத் தருவதில் தவெக அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் முறையாக வழங்கப்படாததால் ஒரு லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்க்கான அறையை மாற்றுவதற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வரும் நிலையில் இதுபோன்ற நடவடிக்கைகள் தேவையா என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
கர்நாடக அரசு நீதிமன்றத் தீர்ப்பையே மதிக்காத நிலையில், முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டும் காவிரி நீர் திறக்கப்படும் என எதிர்பார்ப்பது சாத்தியமில்லை என்றும் அவர் கூறினார்.
காவிரி விவகாரத்தில் கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் போராட்டங்களும் சட்டப்போராட்டங்களும் நடைபெற்றுள்ளதாக குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, உச்சநீதிமன்ற தீர்ப்பையே கர்நாடகா மதிக்காத நிலையில் பேச்சுவார்த்தை மூலம் மட்டும் தீர்வு கிடைக்குமா என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என கூட்டணி கட்சிகள் வலியுறுத்தியும் தவெக அரசு அதனை நடத்தவில்லை எனக் கூறிய அவர், தேர்தல் வாக்குறுதியான விவசாயக் கடன் தள்ளுபடியை முழுமையாக நிறைவேற்றாவிட்டால் விவசாயிகள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என எச்சரித்தார்.
மேலும், "தமிழ்நாட்டில் ஒரு பிரதமர் உருவாக வேண்டும் என ஆதவ் அர்ஜுனா கூறுவது கனவு மட்டுமே" என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காதது குறித்து எழுந்த கேள்விக்கும் அவர் பதிலளித்தார். "ஒருசிலர் பங்கேற்கவில்லை என்பதால் அதிமுகவின் போராட்டம் நின்றுவிடாது" என்ற கருத்தை அவர் தெரிவித்தார்.
"காவிரி நீர், விவசாயக் கடன் தள்ளுபடி, வரி உயர்வு உள்ளிட்ட மக்கள் பிரச்னைகளில் தவெக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அதிமுகவின் முக்கிய கோரிக்கை" என அவர் தெரிவித்தார்.