அரசியல்

விஜய்யைப் புறக்கணிக்கும் ராகுல்..? தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைக்கிறதா காங்கிரஸ்?

By Christon
01 Aug 2026, 11:34 AM
காவேரி பிரச்னை உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழ்நாடு வந்திருக்கும் ராகுல் காந்தி முதலமைச்சர் விஜய்யை சந்திக்காமல் புறக்கணிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடகாவுடனான காவிரிப் பிரச்சனை உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் தமிழக வருகை அரசியல் அரங்கில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தமிழக முதலமைச்சர் விஜய்யை அவர் சந்திக்காமல் செல்வது, தவெக கூட்டணிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவாகவும் காவிரி விவகாரத்தில் தமிழக நலன்களைக் காங்கிரஸ் தட்டிக்கழிப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெறும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுக்கான பயிற்சி நிறைவு முகாமில் பங்கேற்பதற்காகத் தமிழகம் வந்துள்ளார். இக்கூட்டத்தில் 74 மாவட்டத் தலைவர்கள், முன்னாள் மாநிலத் தலைவர்கள், நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் கட்சியின் எதிர்காலச் செயல்பாடுகள், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2029 நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்து அவர் ஆலோசிக்கவுள்ளார்.

ராகுலின் இந்த வருகை மாநில அளவில் கட்சியினை வலுப்படுத்த உதவும் எனத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்தாலும், முதலமைச்சர் விஜய்யைச் சந்திப்பது குறித்த கேள்விக்கு, அவர் பயிற்சி முகாமிற்காக மட்டுமே வருகிறார் எனத் தெரிவித்தார்.

தவெக அமைச்சரவையில் 2 காங்கிரஸ் அமைச்சர்கள் இடம் பெற்றுள்ள போதிலும், ராகுல் காந்தி முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்காமல் செல்வது தவெகவிற்குப் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் காவிரி பிரச்சனை தீவிரமாக இருக்கும் நிலையில், தமிழக முதலமைச்சரை ராகுல் சந்தித்தால் அது கர்நாடக அரசியலில் தங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இச்சந்திப்பை காங்கிரஸ் தவிர்ப்பதாகக் கூறப்படுகிறது.

ராகுல் காந்தி தலையிட்டு காவிரிப் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். "மேகதாது அணை கட்டக்கூடாது என ராகுல் காந்தி அறிவித்தால் நாங்கள் என்டிஏ கூட்டணியிலிருந்து விலகத் தயார்" என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, காவிரி விவகாரம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தத் தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்லத் திட்டமிட்டிருந்தார். ஆகஸ்ட் 3-ஆம் தேதி இதற்கான சந்திப்பு நடைபெறவிருந்த நிலையில், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார், தற்போதைய சூழலில் தமிழக முதல்வர் கர்நாடகா வர வேண்டாம் என்றும், அது தேவையற்ற பதற்றத்தையும் போராட்டங்களையும் உருவாக்கும் என்றும் கூறி அச்சந்திப்பைத் தவிர்த்துவிட்டார்.

ராகுல் காந்தியின் புறக்கணிப்பும், கர்நாடக காங்கிரஸ் அரசின் இந்த அணுகுமுறையும் காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்குத் துரோகம் இழைக்கும் வகையில் அமைந்திருப்பதாகப் பல்வேறு அரசியல் தலைவர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.