தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தைத் தொடர்ந்து, அமைச்சர்களுக்கான புதிய இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், மூத்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் துறை மாற்றப்பட்டுள்ளது.
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முன்னிலையில் இன்று 23 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, இலாகாக்கள் முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கடந்த முறை கே.ஏ.செங்கோட்டையனுக்கு நிதித்துறை வழங்கப்பட்டிருந்தது. பொதுப்பணி அல்லது வருவாய்த்துறையை எதிர்பார்த்த அவருக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டதால் அவர் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அவரது துறை மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, செங்கோட்டையனுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் இருந்த நிதி மற்றும் ஓய்வூதியத் துறை, அமைச்சர் மரிய வில்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் இணையும் ஐயூஎம்எல், விசிக
இதற்கிடையே, தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சி இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாபநாசம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஷாஜகான் விரைவில் அமைச்சராகப் பதவியேற்பார் என ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார். அதேபோல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திண்டிவனம் எம்எல்ஏ வன்னியரசு அமைச்சரவையில் பங்குபெறுவார் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
ஒதுக்கப்படாத முக்கியத் துறைகள்
தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அமைச்சர்களுக்கான இலாகா பட்டியலில் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய இரு முக்கியத் துறைகள் யாருக்கும் ஒதுக்கப்படாமல் காலியாக வைக்கப்பட்டுள்ளன. இந்த இரு துறைகளும் அமைச்சரவையில் புதிதாக இணையவுள்ள விசிக மற்றும் ஐ.யூ.எம்.எல் ஆகிய கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.