தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி விவகாரத்தில், அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்களைக் கட்சி மாறக் கூறி மிரட்டிய வழக்கில் யூடியூபர் உட்பட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களான 2 திமுக பிரமுகர்களைச் சென்னை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவை, வேறு கட்சிக்கு மாறுமாறு கூறி தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாகவும், இதற்காகப் பேரம் பேசியதாகவும் யூடியூபர் 'IPDS' திருநாவுக்கரசை சென்னை திருவல்லிக்கேணி போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், கரூரைச் சேர்ந்த 2 நபர்களின் தூண்டுதலின் பேரிலேயே தான் தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசியதாகப் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
திருநாவுக்கரசு கொடுத்த தகவலின் அடிப்படையில், சென்னை போலீசார் உடனடியாக கரூர் விரைந்தனர். அங்கு 'சக்தி மெஸ்' என்ற பெயரில் உணவகம் நடத்தி வரும் திமுக பிரமுகர்களான கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரைக் கைது செய்தனர். இதில் கார்த்திக், திமுக விளையாட்டு அணியின் துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். கைதான இருவரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மிகவும் நெருக்கமானவர்கள் மற்றும் அவரது 'கரூர் கம்பெனி'யைச் சேர்ந்தவர்கள் ஆவர். கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, அவர்களது வீடுகளில் போலீசார் நடத்திய அதிரடிச் சோதனையில் கணக்கில் வராத ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தவெக ஆட்சியை கவிழ்க்கச் சதித் திட்டம் தீட்டப்பட்டு வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் நேற்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்த நிலையில், இன்று இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளது. தவெகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களைக் குறிவைத்து, தலா ரூ.35 கோடி தருவதாகப் பேரம் பேசப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாகத் தற்போது வரை யூடியூபர் திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன் மற்றும் கிருஷ்ணன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரிலேயே எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆளுங்கட்சியின் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயன்ற வழக்கில் திமுக பிரமுகர்கள் சிக்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.