தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரடியாகப் போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனுடன், அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவால் காலியான பெருந்துறை, தாராபுரம், மதுராந்தகம், அம்பாசமுத்திரம், விராலிமலை ஆகிய தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 6 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆரம்பகட்டப் பணிகளை தேர்தல் ஆணையம் ஏற்கனவே தொடங்கிவிட்டது.
களமிறங்கும் சீமான்
இந்த இடைத்தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடுவார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் வேளையில், தான் போட்டியிடுவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என அவர் நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் போட்டியிடுவது தற்போது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து நாளிதழ் ஒன்றுக்கு சீமான் அளித்த பேட்டியில், "நடைபெற உள்ள இடைத்தேர்தலில் நான் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று எங்கள் கட்சியினரும், பிற கட்சியினரும் விரும்புகின்றனர். எனவே, இந்தத் தேர்தலில் எனக்கு அம்பாசமுத்திரம் தொகுதி உகந்ததாக இருக்கும் என்று முடிவு செய்து அங்கு போட்டியிட இருக்கிறேன். மீதமுள்ள மற்ற 5 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் பலப்பரீட்சை நடத்துவார்கள்" என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.