அரசியல்

Innova கார் கேட்டவரிடம் 2 Benz காரா?..... அம்பலமான உருட்டு!

By Sumalekha
19 Aug 2026, 08:44 PM
அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்படும் என அறிவித்த போது மொடக்குறிச்சி தவெக எம்எல்ஏ பி. சண்முகன், வழங்கப்படும் காரை இன்னோவா காராக வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த நிலையில் இவரிடம் ஏற்கனவே 4 கார்கள் வைத்திருப்பதாகத் தேர்தல் பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டபேரவை நடைபெற்ற வரும் நிலையில் இன்று நடைபெற்ற சட்டபேரவையில் முதலமைச்சர் விஜய் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். குறிப்பாக இந்த அறிவிப்பால் அனைத்து எம்எல்ஏக்களும் மகிழ்ச்சியடைந்தனர். அரசு சார்பில் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும், கார் ஓட்டுநர், எரிபொருள் மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளுக்காக மாதந்தோறும் ரூ.75 ஆயிரமும், அலுவலகப் பணிகளுக்கு உதவியாளரை நியமித்துக்கொள்ள ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என தெரிவித்தார்.

கடந்த 12ஆம் தேதி சட்டப்பேரவையில் பேசிய காட்டுமன்னார்கோவில் தொகுதி விசிக எம்எல்ஏ ஜோதிமணி, 280 கி.மீ. தொலைவில் இருந்து சட்டப்பேரவைக்கு வருவதாகவும், சொந்தமாக கார் இல்லாததால் வாடகை வாகனத்தில் வருவதாகவும் கூறி, எம்எல்ஏக்களுக்கு அரசு சார்பில் கார் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்தக் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் விஜய் தற்போது நிறைவேற்றியிருப்பது அனைத்து எம்எல்ஏக்களும் வரவேற்பு அளித்துள்ளனர்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ பி. சண்முகன் பேசும்போது, “கொடுக்கும் காரை இன்னோவா காராக கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று பின்னால் இருக்கும் உறுப்பினர்கள் சொல்கிறார்கள்” எனக் கூறினார்.

இந்நிலையில், பி. சண்முகன் தனது தேர்தல் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் மொத்தம் நான்கு கார்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதில் 2014ஆம் ஆண்டு ரூ.12 லட்சத்துக்கு மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ், 2016ஆம் ஆண்டு ரூ.30 லட்சத்துக்கு மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ 250, 2017ஆம் ஆண்டு ரூ.10 லட்சத்துக்கு டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா மற்றும் பின்னர் ரூ.5 லட்சத்துக்கு ஃபோக்ஸ்வேகன் அமியோ ஆகிய கார்களை வாங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தன்னிடம் ஏற்கெனவே நான்கு கார்கள் இருக்கும் நிலையில், எம்எல்ஏக்களுக்கு வழங்கப்படும் அரசு காரை இன்னோவா காராக வழங்க வேண்டும் என அவர் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தது தற்போது கவனம் பெற்றுள்ளது.