அரசியல்

திமுகவை பின்பற்றும் தவெக.. தொடங்கப்பட்ட ஆளுநருக்கு எதிரான ஆட்டம்!

By Christon
28 Jul 2026, 01:39 PM
தமிழகத்தில் திமுகவைத் தொடர்ந்து தற்போது தவெக அரசும் ஆளுநருக்கு எதிரான நிலப்பாட்டைக் கையில் எடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் திமுகவைத் தொடர்ந்து தற்போது தவெக அரசும் ஆளுநருக்கு எதிரான நிலப்பாட்டைக் கையில் எடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டுகளில் ஆளுநருக்கு எதிரான நிலப்பாட்டில் திமுக அரசு உறுதியாகச் செயல்பட்டு வந்தது. சட்டமன்றக் கூட்டத்தொடர்களில் தேசிய கீதம் தொடர்பாக எழுந்த முரண்பாடுகளால் அப்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவி அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார். மேலும், ஆளுநர் பங்கேற்ற பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக்களையும் திமுக அமைச்சர்கள் புறக்கணித்தனர். ஆளுநர் அரசியல் சாசனத்திற்கு எதிராகச் செயல்படுவதாகக் கூறி அன்றைய உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, ஆளுநரை எதிர்ப்பதில் மெத்தனமாக இருப்பதாக திமுக கடுமையாக விமர்சித்து வந்தது. குறிப்பாக, தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தேசிய கீதம் இருமுறை பாடப்பட்டதற்கு திமுக தனது கண்டனத்தைப் பதிவு செய்தது.

இந்நிலையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் அர்லேகர் பங்கேற்றார். அவ்விழாவில் ஆளுநர் மாளிகையின் வழிகாட்டுதலின்படி வந்தே மாதரம் முதலிலும், தேசிய கீதம் இரண்டாவதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகவும் பாடப்படும் எனப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அறிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நெல்லை தவெக எம்.எல்.ஏ முருகன், எம்.பி ராபர்ட் புரூஸ் மற்றும் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோர் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்தனர்.

இச்சம்பவம் குறித்துப் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், பாஜக ஆளும் மாநிலங்களில்கூட அந்தந்த மாநில மொழ வாழ்த்துகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் தரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதனிடையே, சுமார் 45 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கிய பட்டமளிப்பு விழா, வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கி நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்து இயற்றியவரின் பெயரில் உள்ள பல்கலை.யில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வதாக பாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.