அரசியல்

ஸ்டாலின் பெயர் கொண்ட கல்வெட்டு அகற்றம்? திமுவின் குற்றச்சாட்டும் அதிகாரிகளின் விளக்கமும்!

By Christon
06 Jul 2026, 09:50 AM
முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பெயர் கொண்ட கல்வெட்டு அகற்றப்பட்டதாக திமுக குற்றச்சாட்டு முன்வைத்த நிலையில், அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
திராவிட மாடல் அரசின் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக, கல்வெட்டை அகற்றுவது வெட்கமாயில்லையா? என்று திமுக கடுமையாக குற்றம்சாட்டிய நிலையில், அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஸ்டிக்கர் விஜய் அரசே.. வெட்கமே இல்லையா? சென்னையின் குடிநீர்த் தேவையைத் தீர்ப்பதற்காக 2006ஆம் ஆண்டில் தி.மு.க அரசு நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது. முத்தமிழறிஞர் கலைஞர் முதல்வராக இருந்போது, உள்ளாட்சித் துறை முதலமைச்சராக இருந்த கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்தத் திட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து நிறைவேற்றினார்.

2021ஆம் ஆண்டு அவரே முதலமைச்சரான நிலையில், பெருகி வரும் சென்னையின் மக்கள் தொகையையும், விரிந்து வரும் சென்னை மாநகராட்சியின் பரப்பளவையும் கருத்தில் கொண்டு 24-02.2024 அன்று நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் இரண்டாவது பெரிய அலகுக்கான அடிக்கல்லை நாட்டி, தற்போது பணிகள் ஏறத்தாழ நிறைவடையும் நிலையில், இதனைப் பார்வையிட முதல்வர் விஜய் வருகிறார் என்கிற அற்ப காரணத்திற்காக, இரண்டாம் அலகு திட்டத்தின் கல்வெட்டை அகற்றியிருக்கிறது த.வெ.க அரசு.

ஆட்சிக்கு வந்த 50 நாட்களில் எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் உருவாக்க வக்கில்லாத விஜய் அரசு, திராவிட மாடல் அரசின் முதல்வர் தொடங்கிய திட்டத்தின் அடிக்கல்லை அகற்றுவது அதன் பயபீதியையே காட்டுகிறது. முடிவடையும் நிலையில் உள்ள திராவிட மாடல் அரசின் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக, கல்வெட்டை அகற்றுவது வெட்கமாயில்லையா திறமையற்ற விஜய் அரசே?" என்று கடுமையாக சாட்டியுள்ளது.

இந்த நிலையில், திமுகவின் குற்றச்சாட்டுக்கு அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். அதாவது, நெடுஞ்சாலை ஓரமாக வைக்கப்பட்ட கல்வெட்டு சேதமான நிலையில் 10 நாட்களாக பராமரிப்பு பணி நடைபெறுகிறது. சாலை ஓரமாக வைக்கப்பட்டதால் வாகனங்களின் அதிர்வின் காரணமாக கல்வெட்டு சேதமான நிலையில் 10 நாட்களாக சீரமைப்பு பணி நடைபெறுகிறது. பராமரிப்பு பணி மேற்கொண்டு எழுத்துகளுக்கு பாதிப்பு இல்லாமல் கல்வெட்டு பொருத்தும் பணி நடைபெறுகிறது. வரும் 20 ஆம் தேதிக்குள் கல்வெட்டு மீண்டும் பொருத்தப்படும்" என்று தெரிவித்துள்ளனர்.