அரசியல்

நான் முதல்வன்' திட்டத்தை கைவிடுவது ஏன்? - சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி

By Sumalekha
22 Jun 2026, 06:30 PM
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், 'நான் முதல்வன்' திட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அரசிடம் கேள்வி எழுப்பினார்.
உரையைத் தொடங்கிய அவர், முதலமைச்சர் விஜய்க்கு திமுக எம்எல்ஏக்கள் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆளுநர் உரையின்போது தமிழ்த்தாய் வாழ்த்துடன் தேசிய கீதம் இருமுறை இசைக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, "சட்டப்பேரவையின் அதிகாரத்தை ஆளுநரிடம் கொடுக்கும் அளவுக்கு என்ன சமரசம் நடந்தது?" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பேரவைத் தலைவர், "தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டது. தேசிய கீதம் இருமுறை பாடப்பட்டதில் எந்த தவறும் இல்லை" என்றார்.
அதற்கு உதயநிதி, "தேசிய கீதம் இருமுறை பாடப்பட்டால், தமிழ்த்தாய் வாழ்த்தும் இருமுறை பாடப்பட்டிருக்கலாம். தமிழ்த்தாய் வாழ்த்தைவிட ஆளுநர் முக்கியம் என்று தவெக அரசு கருதுகிறதா?" என்று விமர்சித்தார்.

இதையடுத்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கமளிக்கையில், "ஆளுநருடன் எந்த சமரசமும் இல்லை. முதல்முறையாக ஆளுநர் முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஆளுநர் வெளியேறிய பிறகே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது" என்றார்.

மேலும் பேசிய உதயநிதி ஸ்டாலின், "'ஒவ்வொரு துறையிலும் மாணவர்கள் முதல்வனாக வேண்டும்' என்ற நோக்கத்தில் திமுக ஆட்சியில் 'நான் முதல்வன்' திட்டம் உருவாக்கப்பட்டது. அந்தத் திட்டத்தை முடக்கும் முயற்சி தற்போது நடைபெற்று வருகிறது.

'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் 41 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். யுபிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. கடந்த யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற 60 பேரில் 56 பேர் இந்தத் திட்டத்தின் பயனாளிகள். அப்படிப்பட்ட திட்டத்தை கைவிடுவது ஏன்? இதற்கு முதலமைச்சர் விஜய் பதிலளிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.