விளையாட்டு

ஐபிஎல் 2026 சாம்பியன் ஆர்சிபி: தோனி, ரோஹித் வரிசையில் ரஜத் படிதார்!

By Christon
01 Jun 2026, 11:25 AM
ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

அகமதாபாத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இரண்டாவது முறையாகச் சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு தனது முதல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணி, தற்போது 2026 சீசனிலும் கோப்பையைத் தக்கவைத்து, தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் கோப்பையை வென்ற அணி என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

தோனி, ரோஹித் வரிசையில் ரஜத் படிதார்

ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதார், இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஜாம்பவான்கள் மட்டுமே செய்திருந்த மாபெரும் கேப்டன்சி சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார். ஐபிஎல் தொடரில் இதற்கு முன் எம்.எஸ்.தோனி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இரு கேப்டன்கள் மட்டுமே அடுத்தடுத்த ஆண்டுகளில் தங்களது அணிகளுக்குக் கோப்பையை வென்று கொடுத்துள்ளனர்.

அவர்களுக்குப் பிறகு, இந்த அரிய சாதனையை நிகழ்த்திக் காட்டிய மூன்றாவது கேப்டன் என்ற பெருமையை ரஜத் படிதார் பெற்றுள்ளார். இவரது தலைமையில் ஆர்சிபி அணி நடப்பு சீசனின் லீக் சுற்றில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து, முதலாவது தகுதிச்சுற்றிலும் குஜராத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

குஜராத் திணறலும் விராட் கோலியின் 'கிங்' ஆட்டமும்

இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி, ஆர்சிபி அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. தமிழக ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் மட்டுமே பொறுப்புடன் விளையாடி 50 ரன்கள் குவித்தார்.

தொடர்ந்து 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆர்சிபி அணிக்கு, தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் 32 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்தார். நடுவரிசையில் 5 விக்கெட்டுகளை இழந்து அணி தடுமாறியபோது, நட்சத்திர வீரர் விராட் கோலி அதிரடியாகத் தாங்கிப் பிடித்தார். தனது அதிவேக ஐபிஎல் அரைசதத்தை விளாசிய அவர், இறுதி வரை ஆட்டமிழக்காமல் 42 பந்துகளில் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 75 ரன்கள் குவித்து ஆர்சிபி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.