விளையாட்டு

FIFA: உலகக்கோப்பை கால்பந்து: செனகலுக்கு அதிர்ச்சி கொடுத்த பெல்ஜியம்.. கடைசி நிமிட கோலால் த்ரில் வெற்றி!

By Christon
02 Jul 2026, 07:55 AM
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில், செனகல் அணியை வீழ்த்தி பெல்ஜியம் அணி வெற்றிபெற்றுள்ளது.
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில், செனகல் அணியின் பலத்த சவாலை முறியடித்து, கடைசி நிமிட பெனால்டி கோல் மூலம் பெல்ஜியம் அணி 3-2 என்ற கணக்கில் த்ரில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

அமெரிக்காவின் சியாட்டில் மைதானத்தில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தின் தொடக்கத்தில் செனகல் அணியே ஆதிக்கம் செலுத்தியது. போட்டியின் 24-ஆவது நிமிடத்தில் செனகல் வீரர் ஹபீப் டையர்ரா அபாரமாக ஒரு கோல் அடிக்க, முதல் பாதி முடிவில் செனகல் அணி 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதியின் 51-ஆவது நிமிடத்தில், இஸ்மாயிலா சார் செனகல் அணிக்கான 2-வது கோலை அடித்தார். இதனால் 2-0 என்ற கணக்கில் செனகல் அணி வெற்றியை நோக்கி நகர்ந்தது.

ஆட்டம் முடிய இன்னும் 5 நிமிடங்களே இருந்த நிலையில் பெல்ஜியம் அணி அதிரடி காட்டத் தொடங்கியது. 86-ஆவது நிமிடத்தில் பெல்ஜியத்தின் நட்சத்திர வீரர் ரோம்லு லுகாகு முதல் கோலை அடித்து செனகலுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அந்த அதிர்ச்சியில் இருந்து செனகல் மீள்வதற்குள், 89-ஆவது நிமிடத்தில் யூரி டையலெமன்ஸ் மற்றொரு கோலை அடித்து அசத்தினார். இதனால் ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இரு அணிகளுக்கும் தலா ஒரு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வெற்றியாளரைத் தீர்மானிக்கக் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. 120 நிமிடங்கள் வரை இரு அணிகளும் கடுமையாகப் போராடியும் கோல் எதுவும் விழவில்லை. இறுதியில், ஆட்டத்தின் 125-ஆவது நிமிடத்தில் பெல்ஜியம் அணிக்குக் கிடைத்த பொன்னான பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி, யூரி டையலெமன்ஸ் தனது இரண்டாவது கோலை அடித்து அணிக்கு 3-2 என்ற கணக்கில் வெற்றியைத் தேடித்தந்தார். இந்த த்ரில் வெற்றியின் மூலம் பெல்ஜியம் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற, செனகல் தொடரிலிருந்து வெளியேறியது.