விளையாட்டு

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி.. பிசிசிஐ அறிவிப்பு!

By Christon
03 Jun 2026, 03:00 PM
இந்திய அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான முழு அட்டவணை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது.
உலக கிரிக்கெட்டின் வலுவான அணிகளாகத் திகழும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள இந்தச் சுற்றுப்பயணம், கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி இந்தச் சுற்றுப்பயணத்தில் 5 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்திய அணி தனது பயணத்தை அக்டோபர் மாத இறுதியில் டி20 தொடருடன் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து ஒருநாள் தொடரும், இறுதியாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் நடைபெறவுள்ளன.

7 ஆண்டுகளுக்குப் பின் 5 ஒருநாள் போட்டிகள்

இந்தத் தொடரில் இந்திய அணி 7 ஆண்டுகளுக்குப் பிறகு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது ஒரு முக்கிய அம்சமாகும். இதற்கு முன்பாகக் கடந்த 2019-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா விளையாடியிருந்தது. அந்தத் தொடரை 3-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் போட்டிகளின் அட்டவணை

சுற்றுப்பயணத்தின் இறுதிப் பகுதியாக நடைபெறும் டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி, நவம்பர் 19 முதல் 23-ஆம் தேதி வரை பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடைபெறுகிறது. இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நவம்பர் 27 முதல் டிசம்பர் 1-ஆம் தேதி வரை ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்து அணியிடம் 3-0 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது. இதனால் இந்திய அணி, நியூசிலாந்து மண்ணில் தனது ஆதிக்கத்தை செலுத்த தயாராக உள்ளது.