விளையாட்டு

IPL 2026: பெங்களூரு vs குஜராத்.. இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போவது யார் ?

By Christon
26 May 2026, 02:54 PM
நடப்பு ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறுவதற்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
19-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இறுதிப்போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறுவதற்கான முதலாவது தகுதி சுற்று (Qualifier 1) ஆட்டம் இன்று (மே 26) நடைபெறுகிறது.

நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில், புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (18 புள்ளிகள்), குஜராத் டைட்டன்ஸ் (18 புள்ளிகள்), சன்ரைசர்ஸ் ஐதராபாத் (18 புள்ளிகள்) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (16 புள்ளிகள்) ஆகிய அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. இதில், புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் இன்று தர்மசாலாவில் நடைபெறவுள்ள முதலாவது தகுதிச் சுற்றில் நேருக்கு நேர் மோதவுள்ளன.

நேரடி இறுதிப்போட்டி வாய்ப்பு

இமாசலப் பிரதேச மாநிலம் தர்மசாலாவில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். அதேநேரம், தோல்வி அடையும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும். அதாவது, வெளியேற்றுதல் (Eliminator) சுற்றில் வெற்றி பெறும் அணியுடன், இந்த ஆட்டத்தில் தோல்வியடையும் அணி இரண்டாவது தகுதிச் சுற்றில் மோத வேண்டும்.

சரிசம பலத்துடன் அணிகள்

நடப்பு தொடரின் லீக் சுற்றுகளில் இவ்விரு அணிகளும் ஏற்கனவே இரண்டு முறை மோதியுள்ளன. பெங்களூருவில் நடந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியும், அகமதாபாத்தில் நடந்த ஆட்டத்தில் குஜராத் அணியும் வெற்றி பெற்றுப் பதிலடி கொடுத்துள்ளன. இரு அணிகளும் சம பலத்துடன் விளங்குவதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்குக் குறைவிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.