19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 40-வது லீக் ஆட்டத்தில், தோல்வியே காணாத பலமான பஞ்சாப் கிங்ஸ் அணியும், புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இன்று மோதுகின்றன.
நியூ சண்டிகரில் உள்ள முலான்பூர் சர்வதேச மைதானத்தில் இன்றிரவு நடைபெறவுள்ள இந்த ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, இந்த சீசனில் இதுவரை ஒரு தோல்வியைக்கூட சந்திக்காமல் அசுர பலத்துடன் வலம் வருகிறது.
ஆடிய 7 போட்டிகளில் 6 வெற்றி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 13 புள்ளிகளுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. குறிப்பாக, கடந்த போட்டியில் டெல்லிக்கு எதிராக 265 ரன்கள் என்ற இமாலய இலக்கை அதிரடியாக எட்டிப்பிடித்த பஞ்சாப், இன்றைய ஆட்டத்திலும் அதே அதிரடியைத் தொடரக் காத்திருக்கிறது.
மறுபுறம் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 8 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. சென்னை, குஜராத் போன்ற வலுவான அணிகளை வீழ்த்தியிருந்தாலும், கடந்த போட்டியில் ஐதராபாத்திடம் கண்ட தோல்வி அந்த அணிக்குச் சிறு பின்னடைவாக அமைந்தது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பவும், புள்ளிப்பட்டியலில் முன்னேறவும் ராஜஸ்தான் தீவிர முனைப்பு காட்டி வருகிறது.