இலங்கையில் தொடங்கிய முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், இலங்கை ஏ அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணி 277 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா ஏ, இலங்கை ஏ மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ ஆகிய அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடர் இலங்கையில் இன்று தொடங்கியது. ஜூன் 17-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இத்தொடரின் முதல் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாகக் களம் கண்ட சூர்யவன்ஷி 14 ரன்களிலும், பிரப்சிம்ரன் சிங் 2 ரன்களிலும் விக்கெட்டை இழந்து அதிர்ச்சியளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த பிரியான்ஸ் ஆர்யா (32 ரன்கள்) மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி விக்கெட் சரிவைத் தடுத்து அணியை மீட்டது.
திலக் வர்மா - ருதுராஜ் கூட்டணி அசத்தல்
பிரியான்ஸ் ஆர்யா ஆட்டமிழந்த பிறகு, கேப்டன் திலக் வர்மாவுடன் கைக்கோர்த்த ருதுராஜ் கெய்க்வாட் நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடினார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் 113 பந்துகளில் 6 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 101 ரன்கள் குவித்துச் சதமடித்தார். கேப்டன் திலக் வர்மா 60 ரன்கள் எடுக்க, மற்ற பேட்டர்களின் பங்களிப்புடன் இந்தியா ஏ அணி 50 ஓவர்கள் முடிவில் 277 ரன்களை எட்டியது.
ருதுராஜின் லிஸ்ட் ஏ சாதனை
இப்போட்டியில் சதமடித்ததன் மூலம் ருதுராஜ் கெய்க்வாட் லிஸ்ட் ஏ (List A) கிரிக்கெட்டில் தனது அபாரமான ஃபார்மைத் தொடர்ந்துள்ளார். இதுவரை 100 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 59.32 என்ற பவர்புல் சராசரியுடன் 21 சதங்கள் மற்றும் 19 அரைசதங்களைப் பதிவு செய்து உள்நாட்டுப் போட்டிகளில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளார்.