விளையாட்டு

கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்த சாய் சுதர்சன்: ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல்கல்!

By Christon
25 Apr 2026, 11:15 AM
தொடர்ச்சியாக மூன்று ஐபிஎல் சீசன்களில் சதம் அடித்த முதல் இந்தியர் மற்றும் உலகின் இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்தார் குஜராத் அணியின் சாய் சுதர்சன்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வியைத் தழுவினாலும், அந்த அணியின் இளம் நட்சத்திரம் சாய் சுதர்சன் உலக சாதனைகளை முறியடித்து கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

நேற்று நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான 34-வது லீக் ஆட்டத்தில் குஜராத் அணியின் தொடக்க வீரர் சாய் சுதர்சன் அதிரடியான சதத்தை விளாசினார். இந்த சதத்தின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 2,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற மாபெரும் சாதனையைப் படைத்தார். இதற்கு முன்பு கிறிஸ் கெய்ல் 48 இன்னிங்ஸ்களில் இந்த இலக்கை எட்டியிருந்த நிலையில், சாய் சுதர்சன் தனது 47-வது இன்னிங்ஸிலேயே அந்தச் சாதனையைத் தகர்த்து சாதனை படைத்துள்ளார்.

தொடர் சதம்: உலக அளவில் இரண்டாம் இடம்

சாய் சுதர்சன் இந்தப் போட்டியில் அடித்த சதம், ஐபிஎல் தொடரில் அவரது மூன்றாவது சதமாகும். இதன்மூலம் 2024, 2025 மற்றும் நடப்பு சீசன் எனத் தொடர்ச்சியாக மூன்று ஐபிஎல் சீசன்களில் சதம் அடித்த முதல் இந்தியர் மற்றும் உலகின் இரண்டாவது வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்பு கிறிஸ் கெய்ல் மட்டுமே இத்தகைய சாதனையைப் புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவரது அபார ஆட்டத்தால் குஜராத் அணி 20 ஓவர்களில் 205 ரன்களைக் குவித்தது.

வெற்றியை வசப்படுத்திய பெங்களூரு

குஜராத் நிர்ணயித்த 206 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூரு அணியில், விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் முதல் பந்திலேயே கோலி கொடுத்த கேட்ச் வாய்ப்பைக் குஜராத் தவறவிட்டது அந்த அணிக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது. 18.5 ஓவர்களில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டிய பெங்களூரு அணி, புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில் விராட் கோலி ஒரே அணிக்காக 300 சிக்சர்கள் விளாசிய முதல் வீரர் என்ற தனித்துவமான சாதனையையும் படைத்தார்.