விளையாட்டு

பட்டையை கிளப்பிய வைபவ் சூர்யவன்ஷி; 57 ஆண்டுகால சாதனையை முறியடித்து அசத்தல்!

By Christon
31 Aug 2026, 05:03 PM
துலீப் டிராபியில் 57 ஆண்டுகால வரலாற்றுச் சாதனையை 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற மத்திய மண்டல அணிக்கு எதிரான துலீப் டிராபி அரையிறுதி ஆட்டத்தில், 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி மிகக் குறைந்த வயதில் 57 ஆண்டுகால வரலாற்றுச் சாதனையை முறியடித்துள்ளார்.

கிழக்கு மண்டல அணியின் தொடக்க வீரராகக் களம் கண்ட வைபவ் சூர்யவன்ஷி, அதிரடியாக விளையாடி வெறும் 42 பந்துகளில் சிக்ஸர் அடித்து தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். இதன் மூலம், 15 ஆண்டுகள் 175 நாட்களில் துலீப் டிராபி வரலாற்றில் அரைசதம் விளாசிய மிக இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

இதற்கு முன், 1969-இல் லக்ஷ்மண் சிங் (16 வயது 23 நாட்கள்) படைத்த சாதனையே முதலிடத்தில் இருந்தது. தற்போது அந்தச் சாதனையை வைபவ் தகர்த்துள்ளார். இந்தப் பட்டியலில் பியூஷ் சாவ்லா (16 வயது 307 நாட்கள்) மூன்றாவது இடத்தில் உள்ளார். இப்போட்டியில் 92 ரன்கள் குவித்த வைபவ், வெறும் 8 ரன்களில் தனது முதல் முதல்தரப் போட்டி சதத்தைத் தவறவிட்டார்.

பேட்டிங் மட்டுமின்றி, இப்போட்டியின் முதல் நாளில் கிழக்கு மண்டல அணியின் கேப்டன் இஷான் கிஷனுக்கு மணிக்கட்டில் காயம் ஏற்பட்டதால், வைபவ் சூர்யவன்ஷி சுமார் ஒரு மணி நேரம் தற்காலிகக் கேப்டனாகவும் செயல்பட்டார்.

முன்னதாகக் கால் இறுதி ஆட்டத்தில் பேட்டிங்கில் சொதப்பினாலும், பந்துவீச்சில் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து கிஷான் லிங்டோ, இம்லிவாதி லெம்தூர் ஆகிய இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார். பேட்டிங், பந்துவீச்சு, கேப்டன்சி என அனைத்திலும் 15 வயதிலேயே முத்திரை பதித்து வரும் வைபவ், இந்தியக் கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார்.