சட்டசபை தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் காலை 8 மணிக்கு எண்ணும் பணி தொடங்கியது. இன்னும் 30 நிமிடத்தில் எந்த கட்சி முன்னிலை என்பது தெரிய வரும்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 85 % வாக்குப்பதிவு நடந்து சாதனை படைத்தது. தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்கு பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பலத்த காவல்துறை அதிகாரிகள், ராணுவப்படை வீரர்கள், கட்சி முகவர்கள் என பலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
4.61 லட்சம் தபால் வாக்குகள் பதிவானது. இதில் 2.88 லட்சம் தேர்தல் அலுவலர்கள் தபால் வாக்குகளை பதிவு செய்தனர். 85 வயதுக்கும் மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் என 1.73 லட்சம் பேர் வாக்களித்தனர், 1.10 லட்சம் அலுவலர்கள் வாக்குச்சாவடிகளில் நேரடியாக வாக்களித்தனர். இந்த தபால் வாக்குகள் காலை 8 மணிக்கு எண்ண தொடங்கப்பட்டது.
ஒவ்வொரு தொகுதியிலும், தலா, 500 தபால் ஓட்டுகளுக்கு ஒரு டேபிள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு டேபிளிலும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், 'மைக்ரோ அப்சர்வர், ஒரு மேற்பார்வையாளர் இரண்டு உதவியாளர்கள் என, ஐந்து பேர் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
தபால் வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு EVM மிஷினில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கபட உள்ளது. 234 சட்டமன்ற தொகுதிகளில் 75,064 வாக்குச்சாவடிகளில் மையங்களில் பயன்படுத்தப்பட்ட EVM மிஷினில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட உள்ளது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் தேர்தல் ஆணையம் சார்பில் வேட்பாளர் பெற்ற வாக்குகள் விபரம் அறிவிக்கப்பட உள்ளது.