சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ஆணையாளர் சமீரன், துணை மேயர் மகேஷ் குமார் முன்னிலையில் இன்று நடைபெற்றது. தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்த பின்பு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் பலத்த எதிர்பார்ப்புடன் கூட்டம் தொடங்கியது.
இந்த கூட்டத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் இடையே ஏற்பட்ட வார்த்தைப் போர் ஒரு கட்டத்தில் இருக்கையை விட்டு எழுந்து எதிரெதிராக பாயும் அளவுக்கு சென்றதால், அவையில் பதற்றம் நிலவியது. கூட்டத்தில் பேசிய மேயர் பிரியா, ஆக்கிரமிப்பில் உள்ள பகுதியில் உடனடியாக அடிப்படை வசதிகளை ஏற்படுத்த முடியாது என்றும், நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அப்போது மண்டலக் குழுத் தலைவர் ரவிச்சந்திரன் பேச எழுந்த நிலையில், அ.தி.மு.க. உறுப்பினர் சதீஷ்குமார், "நீங்கள் அமருங்கள்" என்று கூறியதாகத் தெரிகிறது. இதற்கு தி.மு.க. உறுப்பினர் கவி கணேசன் எதிர்ப்பு தெரிவித்தார்.
"நான் வார்டு பிரச்னையைப் பற்றிதான் பேசுகிறேன். அரசியல் பேசவில்லை" என்று கவி கணேசன் கூறிய நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார், தனது இருக்கையை விட்டு எழுந்து தி.மு.க. உறுப்பினர்களை நோக்கி வேகமாக சென்றார். இதையடுத்து தி.மு.க. உறுப்பினர்களும் எழுந்து எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் அமளி ஏற்பட்டது.
அப்போது 1-வது வார்டு உறுப்பினர் சிவக்குமார், தனது கையில் இருந்த ஆவணங்களை சதீஷ்குமாரை நோக்கி வீசி எறிந்ததாக கூறப்படுகிறது. மூத்த உறுப்பினர்கள் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து, நிலைமை கட்டுக்குள் வந்தது.
பின்னர் மேயர் பிரியா, மண்டலக் கூட்டங்களில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பங்கேற்று கருத்து தெரிவிக்கவும், மேடையில் அமரவும் உரிமை இருப்பதாக விளக்கம் அளித்தார்.
இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியிலும், மாமன்றக் கூட்டத்தில் எடுத்துவரப்பட்ட 38 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடதக்கது.