சென்னையில் சொத்து வரி திடீரென பல மடங்கு உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். கடந்த முறை ரூ.800 முதல் ரூ.900 வரை செலுத்தியவர்கள், தற்போது ரூ.6,000க்கும் மேல் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, சென்னை மாநகராட்சி நிர்வாகம் சொத்து வரியை புதிதாக உயர்த்தவில்லை என்றும், சொத்துகளின் மறு சீராய்வு அடிப்படையிலேயே வரி தொகை மாற்றப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை மாநகராட்சி தற்போது கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. மாநகராட்சியின் நிதிப் பற்றாக்குறை சுமார் ரூ.1,970 கோடியாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி உள்ளிட்ட நிறுவனங்களிடம் பெறப்பட்ட சுமார் ரூ.2,000 கோடி கடனுக்கு ஆண்டுதோறும் ரூ.92.50 கோடி வரை வட்டி செலுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல், மாநகராட்சியின் பல்வேறு திட்டப்பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்களுக்கு சுமார் ரூ.2,000 கோடி வரை நிலுவைத் தொகை வழங்கப்பட வேண்டியுள்ளது. வார்டு மேம்பாட்டு நிதியிலும் சுமார் ரூ.120 கோடி விடுவிக்கப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில், சொத்து வரி வசூலை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. சென்னையில் சுமார் 14 லட்சம் சொத்து உரிமையாளர்கள் உள்ள நிலையில், வரி செலுத்தாதவர்களிடம் இருந்து நிலுவைத் தொகையை வசூலிக்க சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும், கடந்த 2018ஆம் ஆண்டு சொத்து உரிமையாளர்கள் அளித்த சுய அறிவிப்பின் அடிப்படையில் பல சொத்துகளுக்கு வரி மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. இதில் சிலர் கட்டடத்தின் பரப்பளவு மற்றும் காலி இடத்தின் அளவை குறைத்து குறிப்பிட்டிருக்கலாம் என மாநகராட்சி தரப்பில் கூறப்படுகிறது.
இதையடுத்து சொத்துகளின் உண்மையான பரப்பளவு மற்றும் பயன்பாட்டை கண்டறிய ட்ரோன், ஜி.பி.எஸ். உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வான்வழி படங்கள் மூலம் பெறப்பட்ட தகவல்கள் மாநகராட்சி வரி வசூலிப்பாளர்களால் சரிபார்க்கப்பட்டுள்ளன.
இந்த ஆய்வின் அடிப்படையில் முதற்கட்டமாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொத்துகளுக்கு மறு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான மறு மதிப்பீட்டு ஆணைகள் சொத்து உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பலருக்கு ஏற்கனவே செலுத்தி வந்த தொகையை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாக சொத்து வரி உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் 600 முதல் 700 சதவீதம் வரை கூடுதலாக வரி வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் கூறுகையில், “எங்களிடம் கருத்து கேட்டிருந்தால், தற்போது இந்த வரி ஆய்வை மேற்கொள்ள வேண்டாம் என்றே தெரிவித்திருப்போம். ஆனால், எங்களிடம் ஒப்புதல் பெறாமலும், எங்கள் கவனத்திற்குக் கொண்டுவராமலும் இந்த வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
சொத்து வரி உயர்த்தப்படவில்லை என மாநகராட்சி விளக்கம் அளித்துள்ள நிலையில், மறு சீராய்வு காரணமாக பொதுமக்களுக்கு பல மடங்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.