தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் தமிழக முதலமைச்சர் விஜய்யின் பயன்பாட்டிற்காக, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அதிநவீன குஷன் நாற்காலி (Cushion Chair) மாற்றப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற த.வெ.க தலைவர் விஜய், தினமும் தலைமைச் செயலகம் வந்து மக்கள் பணிகளை மேற்கொண்டு வருகிறார். காலை 9:30 மணிக்கெல்லாம் அலுவலகம் வந்துவிடும் அவர், மதிய உணவிற்காக வீட்டிற்குச் செல்லாமல் அங்கேயே முடித்துக்கொண்டு, மாலை 4:00 மணி வரை அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார். இவருடைய இந்த நேரக் கட்டுப்பாடும் எளிமையான அணுகுமுறையும் பலரது பாராட்டுகளைப் பெற்று வரும் அதே வேளையில், அவரது அறையில் உள்ள நாற்காலி மாற்றப்பட்டிருப்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் கவனம்பெற்றுள்ளது.
அதிநவீன குஷன் நாற்காலி
கடந்த மே 10-ஆம் தேதி பொறுப்பேற்றது முதல் முதலமைச்சர் விஜய் சாதாரண நாற்காலியையே பயன்படுத்தி வந்தார். கடந்த 2-ஆம் தேதி ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் வி. ஸ்ரீஹரியைச் சந்தித்தபோது எடுக்கப்பட்ட அரசுப் புகைப்படத்திலும் பழைய நாற்காலியே இருந்தது. ஆனால், இன்று தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி எஸ். மணிகுமார் அவரைச் சந்தித்தபோது வெளியான புகைப்படத்தில், முதல்வர் விஜய் புதிய அதிநவீன குஷன் நாற்காலியில் அமர்ந்திருப்பது தெரியவந்தது.
முதுகு வலி காரணமாக மாற்றம்?
தினமும் சுமார் 6 மணி நேரம் வரை தொடர்ந்து நாற்காலியில் அமர்ந்து கோப்புகளைப் பார்ப்பதாலும், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதாலும் முதலமைச்சர் விஜய்க்கு முதுகு வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், உடலுக்குத் தகுந்தாற்போல் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அதிநவீன குஷன் நாற்காலிக்கு அவர் மாறியுள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.