தமிழ்நாடு

தூய்மைப் பணிகள் தனியாருக்கா?... தமிழக அரசுக்கு சிபிஎம் கடும் எதிர்ப்பு!

By Sumalekha
22 Jun 2026, 09:35 PM
தூய்மைப் பணியை தனியார்மயமாக்கும் முயற்சியை முழுவதுமாக கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சிபிஎம் மாநிலச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாடு அரசு 12 மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்க ஆய்வு செய்வதற்காக ஒப்பந்தப் புள்ளிகள் கோரியிருக்கிறது. இது தனியார்மயத்தை நோக்கிய முதல் படியாகும்.

தூய்மைப்பணி தனியார்மய முயற்சிகளில் இதுவே தீவிரமான நடவடிக்கையாகும். அவ்வப்போது தனியார்மய முயற்சிகளை தமிழ்நாடு அரசாங்கம் மேற்கொள்வதும், ஊழியர்கள் போராடி தடுப்பதும், தள்ளிப்போடுவதும் கடந்த கால அனுபவமாக இருந்திருக்கிறது.

தொழிலாளிகள் ஓய்வு பெற்றால் அந்த இடங்களை வெளிமுகமை வைத்து நிரப்புவது என்று அரசாணை வெளியிடப்பட்டதும் மாநகராட்சியின் சில வார்டுகள், மண்டலங்களில் தனியார்மயம் என்பதும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், 12 மாநகராட்சி தூய்மைப்பணி ஒட்டுமொத்தமாக தனியார்மயமாக்கும் செயலாக இது உள்ளது.

தேர்தலுக்கு முன்னர் சென்னை மாநகராட்சி தூய்மைப்பணி தொழிலாளர்கள் போராடும் போது தவெக அதை ஆதரித்திருக்கிறது. இந்தப் பின்னணியில், இந்த தனியார்மய முயற்சி முற்றிலும் நியாயமற்றதாகும். ஏழை மற்றும் அடிமட்ட குடும்பங்கள் நிரந்தர வருவாய் ஈட்ட ஈடுபடும் இந்தத் தொழிலை தனியார்மயமாக்குவது பொருத்தமற்றது.

எனவே, தூய்மைப் பணியை தனியார்மயமாக்கும் முயற்சியை முழுவதுமாக கைவிட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.